பக்கம் : 182
 

அரசர் வாழ்க்கையை ஆராயுமிடத்தில், அவர்களுடைய செயல், இருவகையாக
இயங்குகின்றது. தம்பொறிகளாலும் அறிவாலும் கண்டு உணர்வது ஒன்று; பிறர் கண்ணும்
அறிவும் கொண்டு கண்டு உணர்வது மற்றொன்று. முன்னையது தம்மால் எழுவது; பின்னது
அமைச்சர் முடிவால் எழுவது. இறைவர் வாழ்க்கை என்பதற்கு அரசர்களுடைய
மணவாழ்க்கை என்றும் பொருள் உரைக்கின்றனர். அமைச்சர் - அமாத்யர் என்னும் வடசொல்லின் விகாரம்; அண்மையில் இருப்பவர் என்பது காரணப்பொருள். அமா -
அண்மை.

( 115 )

அரசர்கள் அமைச்சராற் சிறப்படைவார்கள் என்றல்

234. தண்ணிய தடத்தவே யெனினுந் தாமரை
1 விண்ணியல் கதிரினால் விரியும் வேந்தரும்
புண்ணியப் பொதும்பரே புரிந்து வைகினும்
கண்ணிய புலவரா லலர்தல் காண்டுமே.
 

    (இ - ள்.) தாமரை - தாமரை மலர்கள், தண்ணிய தடத்தவே எனினும் - குளிர்ந்த
தடாகத்திலுள்ளனவே என்றாலும், விண்இயல் கதிரினால் விரியும் - வானத்திற் பொருந்திய
ஞாயிற்றினுடைய ஒளியினால் மலரும், அது போலவே; வேந்தரும் - அரசர்களும்,
புண்ணியப் பொதும்பரே புரிந்து வைகினும் - நல்வினையாகிய சோலையிலேயே விரும்பித்தங்கி யிருந்தாலும், கண்ணிய புலவரால் அலர்தல் காண்டும் - நன்கு மதிக்கத்தக்க
அறிஞர்களால் விளக்கமடைதலைப் பார்க்கின்றோம். (எ - று.)

குளிர்ச்சியான நீர் வளமுள்ள தடாகத்தில் செழித்து வளருகின்ற தாமரை மலர்தற்கு
விண்ணில் விளங்குகின்ற கதிரவனது ஒளியின் தொடர்பு இன்றியமையாதவாறுபோல
அரசர்கள் நல்வினைச்செறிவில் பெருமை பெற்றிருந்தாலும் அவர்கள் மேன்மையடைவதற்கு
அமைச்சர்களைக் கலந்தாராய்தல் இன்றியமையாதது என்பதாம். பொதும்பர் - மரச்செறிவு.
தண்ணிய - தன்மையையுடைய; பண்படியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம். தடத்த;
பலவின்பாற் குறிப்பு வினையாலணையும் பெயர். புலவர் என்பது ஈண்டு அரசியல்
நூல்களில் புலமை வாய்ந்த அமைச்சர்களை உணர்த்தி நின்றது.

( 116 )


 (பாடம்) 1. விண்ணிய கதிரினால்.