பக்கம் : 184
 

ஆகையால் இனி நின்றது ஒன்று உண்டு - இனி யான் மேற்கொள்ளற் பாலதாக எஞ்சிநின்ற
ஒருபொருள் உளது அஃதென்னெனின்; நீதி நூலினோடு ஒன்றி நின்றவர் உரை உலகம்
ஒட்டுமே - அறநூல்களை யுணர்ந்த அறிஞர்கள் மொழியேயாகும். அதன் படி ஒழகின்
இவ்வுலகமானது அச்செயலை ஒப்புக்கொள்ளும். (எ - று.)

ஒருவன் அறிவுக்கு ஒன்று நல்லதென்று தோன்றுகையில், அதுவே மற்றொருவன் அறிவுக்கு
நல்லது அன்று என்று தோன்றுதல் கூடும். ஆகவே ஒன்றைச் சிறப்பாக உறுதி செய்வதற்கு,
ஒருவனுடைய அறிவுமட்டும் போதாது. பிறருடைய சூழ்ச்சித் துணையையுங் கலந்து
செய்வதே தகுதி; ஆகையால் நான் இப்பொழுது சுயம்பிரபையின் திருமணத்தின்
பொருட்டுச் செய்யவேண்டியது யாதெனில். அமைச்சர்களைக் கலந்தெண்ணுவதேயாம்.
அவ்வாறு செய்யின் உலகம் அதனை ஒப்புக்கொள்ளும் என்று சுவலனசடியரசன் முடிவு
செய்தான். ஒட்டுதல் - உடன்படுதல்.

( 118 )

ஆயிரங்கண்ணனுக்கும் ஆயிரம் அமைச்சர்கள்
உண்டென எண்ணல்

237. அந்தண ரொழுக்கமு 1மரைசர் வாழ்க்கையும்
மந்திர மில்லையேன் மலரு மாண்பில
இந்திர னிறைமையு மீரைஞ் ஞூற்றுவர்
தந்திரக் கிழவர்க டாங்கச் செல்லுமே.
 

     (இ - ள்.) அந்தணர் ஒழுக்கமும் - முனிவர்களது தவவொழுக்கமும்; அரைசர்
வாழ்க்கையும் - அரசர்களுடைய சிறந்த நல்வாழ்வும்; மந்திரம் இல்லையேல் -
மந்திரத்தோடு கூடியதாக இல்லாவிட்டால்; மலரும் மாண்பில சிறந்து விளங்கும்
பெருமையோடு கூடியதாக அமையமாட்டா; இந்திரன் இறைமையும் - இந்திரனுடைய
அரசாட்சிச் சுமையும்; தந்திரக் கிழவர்கள் ஈர் ஐஞ்ஞூற்றுவர் தாங்கச் செல்லும் -
அமைச்சர்கள் ஆயிரம்பேர்கள் உடனிருந்து தாங்க நடைபெறுவதாகும், (எ - று.)


(பாடம்) 1. அரச.