பக்கம் : 185
 

மந்திரம் - அந்தணர் ஒழுக்கத்திற்கு வேதமந்திரமும், அரசர் வாழ்க்கைக்கு
அமைச்சர்களோடு கலந்தெண்ணுதலுமாம்; செம்மொழிச்
சிலேடை. அந்தணர் வாழ்க்கை மறைமொழியோடு கூடாவிடின் பயன்தராது; அதைப்போல்
அரசர் வாழ்க்கை அமைச்சர்களின் சூழ்ச்சித்துணை யில்லாவிட்டால் பயன்தராது.
தந்திரக்கிழவர் - ஈண்டு அமைச்சர். இந்திரன் ஆயிரம் அமைச்சர்களைச் சூழ்ச்சித்
துணையாகக் கொண்டுள்ளான் என்று நூல்கள் கூறும்.

( 119 )

அமைச்சர்களை அழைக்கமாறு கட்டளையிடுதல்

238. என்றுதன் மனத்தினா னெண்ணி யீண்டுசீர்
நின்றநூற் கிழமையி னீதி மாக்களை
யொன்றிநீர் தருகென வுழைக்குற் றேவலார்
சென்றவர்க் கருளிது வென்று செப்பினார்.
 

     (இ - ள்.) என்று தன் மனத்தினான் எண்ணி - இவ்வகையாகச் சுவலனசடியரசன்
தன்னுள்ளத்திலே நினைத்து; ஈண்டு சீர் நின்ற - நிறைந்த புகழானது நிலைபெற்று நின்ற;
நூல் கிழமையின் நீதி மாக்களை - நூல்களைப் படித்தறிந்து அவைகட்கு உரிமை
பூண்டவர்களாக நின்ற அறநெறியுணர்ந்த அமைச்சர்களை; ஒன்றி - அடைந்து; நீர் தருக
என - நீர் இங்கு அழைத்து வருகவென்று கட்டளையிட; உழைக்குற்றேவலார் -
அண்மையிலிருந்த ஏவலாளர்கள்; சென்று - அமைச்சர்களிடம் போய்; அவர்க்கு -
அவ்வமைச்சர்களுக்கு; அருள் இது என்று செப்பினார் - அரசன் இட்ட கட்டளை
இஃதாகும் என்று செய்தியைக் கூறினார்கள். (எ -று.)

இப்படிப் பலவாறு எண்ணமிட்ட சுவலனசடி மன்னன், தன் அண்மையில் இருந்த
ஏவலர்களைப் பார்த்து, “அமைச்சர்களை அழைத்து வாருங்கள்“ என்று கட்டளையிட்டான்.
ஏவலர்கள் அமைச்சர்களிடஞ் சென்று செய்தியைத் தெரியப்படுத்தினார்கள். ஈண்டுசீர் -
நிறைந்தபுகழ்.நீதிமாக்களை - மக்கள் என்னுஞ்சொல் நீண்டு நின்றது. தருகவென
எனற்பாலது தருகென என நின்றது; தொகுத்தல் விகாரம். சுவலனசடியரசனுக்கு
அமைச்சர்கள் சுசுருதன், பஹுசுருதன், சுருதசாகரன், சுமதி என நால்வர் என்ப.

( 120 )

நான்காவது இரதநூபுரச்சருக்கம் முற்றிற்று.