(இ - ள்.) வள்ளல்தன் மந்திரசாலை வண்ணம் - அரசன் அமைச்சர்களோடு அமர்ந்து கலந்தெண்ணும் மந்திரசாலையின் இயல்பு; வெள்ளிவெண் விளிம்பினால் - வெள்ளியாலாகிய வெண்மைநிறமுடைய கரையினால், விளங்குவேதிகை - விளங்குகிற திண்ணையோடு கூடியது, உள்ளுள் நின்று ஒலி புறப்படாதது - உள்ளே நின்றும் ஒலியானது வெளியேயுள்ளார் கேட்குமாறு வராதது, ஒண்சிறைப்புள்ளும் - ஒள்ளிய சிறையினையுடைய பறவைகளும், அல்லாதவும் - அதனை யொழித்த மற்றைய உயிர்த்தொகைகளும், புகாத நீரது - உள்ளே நுழைதற்கியலாத தன்மை பொருந்தியது. (எ - று.)இச்செய்யுளில் மந்திரசாலையின் தன்மை இயம்பப்பட்டது. ஒலிவெளிப்படின் உண்மை வெளிப்படுமாகலின் அம்மண்டபம் ஒலி வெளியே கேட்காதபடியும், எத்தகைய உயிர்த்தொகையும் உள்ளே புகுந்திடாதவாறும் அமைக்கப்பட்டுள்ளது என்க. பறவைகளுள் பூவையும் கிளியும் மாந்தர் மொழிவதனை மொழியுமியல்புடையன வாதல் பற்றிப் புள் முதலியன புகப்பெறாததாக மந்திர சாலை அமைக்கப்பட்டிருந்தது என்பதாம். “பூவையுங் கிளியும் மன்னர் ஒற்றெனப் புணர்க்குஞ்சாதி யாவையும் இன்மை யாராய்ந்து“ என்றார் திருத்தக்க தேவரும் (சீவக - 384). “புள்ளுமில்லா ஒள்ளொளி யிருக்கையுள் மறைபுறப்படாஅச் செறி வினராகி“ என்றார் பெருங்கதையினும் (3. 24: 216 - 7). |