பக்கம் : 19
 

நெய்தல் நிலம்

16. கலவ ரின்னிய முங்கட லச்சிறார்
புலவு நீர்ப்பொரு பூணெறி பூசலும்
நிலவு வெண்மண னீளிருங் கானல்வாய்
உலவு மோதமு மோங்குமொர் பாலெலாம்.
 
     (இ - ள்.) கலவர் இன் இயமும் -மரக்கலங்களையுடைய பரதவர் முழக்கும் இனிய
இசைக்கருவி முழக்கமும்; கடல் அ சிறார் புலவுநீர் பொருபூண் எறி பூசலும் -
கடலினிடத்தே விளையாடும் அந்நெய்தல் நிலச்சிறுவர்கள் புலால்நாற்றம்வீசும்நீரினிடத்தே
தாம் அணிந்துள்ள அணிகலன் களை எறிந்து விளையாடும் ஆரவாரமும்; நிலவு
வெள்மணல் - மிக வெண்ணிறமான மணலையுடைய; நீள் இரும் கானல்வாய் - நீண்ட
பெரிய கடற்கரைச் சோலைகளிலே; உலவும் ஓதமும் - வந்து உலாவுகின்ற கடல்
அலைகளின் ஒலியும்; ஒர்பால் எலாம் ஓங்கும்-அந்நாட்டின் ஒரு பகுதியான நெய்தல்
நிலத்தின் இடம் எங்கும் மிகுந்திருக்கும். எ - று.

     நெய்தல்நிலத்தின் இயல்பை இவ்வாறு கூறினார். கடலுங் கடலைச் சார்ந்த இடமும்
நெய்தல். கலவர்; கலம் என்பத னடியாகப் பிறந்த பலர் பாற்பெயர். அச்சிறார் என்றது
அந்நிலத்திலுள்ள சிறுவர் என்றவாறு.

 ( 10 )

குறிஞ்சி நிலம்

17. கைவி ரிந்தன காந்தளும் பூஞ்சுனை
மைவி ரிந்தன நீலமும் வான்செய்நாண்
மெய்வி ரிந்தன வேங்கையும் சோர்ந்ததேன்
நெய்வி ரிந்தன நீளிருங் குன்றெலாம்.
     (இ - ள்.) காந்தளும் கைவிரிந்தன - செங்காந்தள் மலர்கள் மங்கையர்களுடைய
கைகளைப்போல மலர்ந்தன; பூஞ்சுனை நீலமும் மைவிரிந்தன - அழகிய
சுனையிடத்தனவாகிய நீல மலர்களும் மைபரவினாற் போல மலர்ந்தன; வேங்கையும் -
வேங்கை மரங்களும்; வான்செய் நாள்மெய் விரிந்தன - சிறப்பைத் தரும் நன்னாளிலே
தம்மெய் நிரம்ப மலர்ந்தன; சோர்ந்ததேன் நெய் - இம்மலர்கள் ஒழுகவிட்டதேனாகிய
நெய்; நீள் இரும் குன்று எலாம் நீண்ட-பெரிய குன்றுகளிலெல்லாம்; விரிந்தன-பரவின.