பக்கம் : 191
 
  பாங்கலார் பணியச் சூழு நூலவர் பாக மாகப்
பூங்குலா மலங்கண் மாலைப் புரவலன் பொறுக்கு மன்றே.

     (இ - ள்.) தளை அவிழ் தயங்குதாரீர் - கட்டவிழ்ந்த மலர்கள் பொருந்திய
மாலையை அணிந்த அமைச்சர்காள்!, வீங்குநீர் உலகம் காக்கும் விழுநுகம் - மிகுந்த நீர்
பொருந்திய கடலாற் சூழப்பட்ட உலகத்தினைப் பாதுகாக்கும் உயரிய அரசாட்சிச்
சுமையானது, ஒருவனாலே தாங்கலாந் தன்மையமைந்ததன்று, பாங்கு அலார் பணிய -
நட்பற்ற பகைவர்களும் தன்னைப் பணிந்து தன்வழியொழுக, சூழும் நூலவர் பாகமாக -
தன்னைச் சூழ்ந்துள்ள அறநூல்களை யுணர்ந்தவர்களான அமைச்சர்கள் பக்கத் துணையாக,
பூங்குலாம் அலங்கன் மாலைப்புரவலன் - மலர்களமைந்து விளங்கும் அசைகின்ற
மாலையை அணிந்த அரசனானவன், பொறுக்கும் - தான் அரசாட்சிச் சுமையைத்
தாங்குவான் (எ - று.)
அன்றே : அசை.

அரசியற்சுமை அரசனாகிய ஒருவனால் மட்டும் சுமக்க வியலாத தொன்று. அமைச்சர்களும்
துணையாக நின்று தாங்கியபொழுதே இனிது தாங்கப்படு மியல்யுடையது என்கிறான்
அரசன். வீங்கு நீர் - மிகுதியாகிய நீர்; எனவே கடலுக்காயிற்று. நுகம் - நுகத்தடி, பாரம்,
நடுவு நிலைமை, வலிமை, கதவின் கணையமரம்.

( 7 )

அரசன் முகமன் மொழிதல்

246. அற்றமின் றுலகங் காக்கு மருந்தொழில் புரிந்து நின்றான்
கற்றவர் மொழிந்த வாறு கழிப்பது கடன தாகு
மற்றவற் குறுதி நோக்கி வருபழி வழிகள் தூரச்
செற்றவர்ச் செகுக்குஞ் சூழ்ச்சி தெருண்டவர் கடவ வன்றே.
 

     (இ - ள்.) அற்றம் இன்று உலகம் காக்கும் - சோர்வின்றி உலகத்தைப் பாதுகாக்கும்,
அருந்தொழில் புரிந்து நின்றான் - அரிய அரசாட்சித் தொழிலை மேற்கொண்டு நின்ற
மன்னனுக்கு, கற்றவர் - அவனுடைய அமைச்சர்கள் - மொழிந்தவாறு -
ஆராய்ந்துணர்த்தியபடியே கழிப்பது - வினைகளைச் செய்து முற்றுவிப்பது ஒன்றே, கடனது
ஆகும் - கடமையாகும். தெருண்டவர் - நூல்களைக் கற்றுத் தெளிந்த அமைச்சர்க்கு
அவற்கு - அங்ஙனம் தம்வழிப்பட்டு நின்ற அரசனுக்கு, உறுதி நோக்கி -
ஆக்கமானவற்றைக் குறிக்கொண்டு அவற்றைப் பெறுதற்குரிய வழிகளை வகுத்துக்
காட்டலும், பழிவரு வழிகள் தூர - அவனுக்குப் பழியுண்டாதற்குரிய நெறிகளை அழித்து,
மேலும்; செற்றவர்ச் செகுக்கும் சூழ்ச்சி - அவனுடைய பகைவர்களை அழிக்கும்
உபாயங்களைக் கண்டுணர்த்தலும், கடவ - இன்னோரன்ன பற்பல கடமைகளும் உள்ளன.
(எ - று.)

மன்னன் கடமை அமைச்சர் சொற்படி நடத்தல் ஒன்றே; அமைச்சர்கட்கு அரசனுடைய
ஆக்கங்கருதி ஆற்றவேண்டிய கடமைகள் பற்பல உள்ளன என்பதாம்.

“அரசுவாளின்மேல் வரும் மாதவம்“ என்பது பற்றி அருந் தொழில் என்றார். கற்றவர்
என்றது ஈண்டமைச்சரை. கடனது என் புழி அது பகுதிப் பொருள் விகுதி. மற்று :
வினைமாற்று. பழிவழிகள் தூர என்றதனால் நன்னெறிகளை வகுத்து என்க. செற்றவர் -
பகைவர். தெருண்டவர் - ஈண்டமைச்சர். இஃது அரசன் அமைச்சர்க்குக் கூறிய முகமன்.

( 8 )

அரசனும் அமைச்சர்களும்

247. 1செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து சொன்னால்
அறிந்தவை யமர்ந்து செய்யு மமைதியா னரச னாவான்
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்துகூறி
அறுந்தவை யியற்று கிற்கு மமைதியா ரமைச்ச ராவார்.
 

     (இ - ள்.) அரசன் ஆவான் - உலகத்தை நன்கு பாதுகாக்கக்கூடிய அரசனாவான்
யாவன், என்னின், செறிந்தவர் தெளிந்த நூலார் - நற்குணநற் செயல்கள்
செறிந்துள்ளவர்களும் அறநூல்களையுணர்ந்த வர்களுமாகிய அமைச்சர்கள், சிறந்தவை
தெரிந்து சொன்னால் - நன்மையான செயல்களை ஆராய்ந்து கூறினால், அறிந்து -
அவர்கள் கூறியதனை நன்குணர்ந்து, அவை அமர்ந்து செய்யும் அமைதியான் -
அவைகளை விரும்பிச்


 (பாடம்) 1. செறிந்தவை தெளிந்து கூறி.