பக்கம் : 193
 

சூழ்ச்சியுட் சிறந்தோர் மாட்சிபெறுவர்

249.

ஊழ்வர வன்ன தேனு மொருவகைக் கரும மெல்லாம்
சூழ்பவர் சூழ்ந்து சூழுஞ் சூட்சியுட் டோன்று மன்றே
யாழ்பகர்ந் தினிய தீஞ்சொ லமிர்தனா ரேனுஞ் சூழ்ச்சி
வாழ்பவர் வல்ல ராயின் மன்னராய் மலர்ப வன்றே.
 

     (இ - ள்.) ஊழ்வரவு அன்னதேனும் - ஒருவகையான் நோக்குமிடத்துச் செயல்
ஊழான் வரும் வரவினையுடையது எனினும், ஒருவகை - மற்றோர் வகையான்
நோக்குமிடத்து, கருமம் எல்லாம் - செய்யுஞ் செயல்களெல்லாம், சூழ்பவர் சூழ்ந்து சூழுஞ்
சூழ்ச்சியுள் தோன்றும் - அமைச்சர்கள் ஆராய்ந்துக் கூறும் உபாயத்துள்ளே
தோன்றுவனவாகும். யாழ் பகர்ந்து இனிய தீஞ்செயல் அமிர்தனாரேனும் - யாழிசையைப்
போன்று பேசும் மிகவினிய சொல்லையுடைய அமுதத்தைப் போன்ற மங்கையர்களாக
விருப்பினும், சூழ்ச்சி வாழ்பவர் வல்லர் ஆயின் - சூழ்ச்சித்திறமையுடன் வாழ்வதில்
வல்லவர்களாயின் அவர்கள், மன்னராய் மலர்ப - அரசர்களாகக்கூட விளங்குவார்கள்,
அன்றே - அல்லவோ (எ - று)
அச்சமும் மடனும் மென்மையுமுடைய மகளிரும் அமைச்சர் துணையால் அரசராதல் கூடும்
என அமைச்சர் மாண்பினை உயர்த் தோதுகின்றான்.
ஊழான் வருவன மாந்தர் அறிவுக்கு அப்பாற்படுதலின் அது கிடக்க என்பான் ‘ஊழ்வரவு
அன்னதேனும்‘ என்றான். சூழ்பவர் என்றது அமைச்சர் என்னும் பெயராய் நின்றது; சூழ்ச்சி
வாழ்பவர் என்பதனையும் அமைச்சர் பெயராக்கினு மமையும்.

( 10 )

சூழ்ச்சியே அரசன் ஆற்றல்

250. ஆற்றன்மூன் றோதப்பட்ட வரசர்கட் கவற்றின் மிக்க
ஆற்றறான் சூழ்ச்சி யென்ப தாதலா லதனை யாயும்
ஆற்றலா ரமைச்ச ராக வமைச்சரோ டமர்ந்து செல்லும்
ஆற்றலா னரச னாகி னரியதொன் றில்லை யன்றே,
 

     (இ - ள்.) அரசர்கட்கு - உலகத்தையாளும் மன்னர்கட்கு, ஆற்றல் மூன்று -
நூல்களான் ஓதப்பட்ட ஆற்றல்கள் மூன்றாகும், அவற்றில்-பெருமை அறிவு முயற்சி
என்னும் அம்மூவகையாற்றலுள்ளும், மிக்க ஆற்றல்தான் சூழ்ச்சி என்ப - தலை சிறந்த
ஆற்றலாவது நடுவணின்ற அறிவாகிய சூழ்ச்சியே என்று சொல்வார்கள். ஆதலால் -
ஆகையால், அதனை ஆயும் ஆற்றலார் - அச் சூழ்ச்சியை ஆராய்ச்சி செய்யும்
அறிவுவலியுடையார், அமைச்சர்ஆக - தனக்கு உசாத்துணைவராக, அமைச்சரோடு -