- நமது வழிமுறையானது விளங்குமாறு பிறந்துள்ள, நங்கைதன் நலத்திற்கு ஒத்தான் - சுயம்பிரபையினுடைய அழகிற்குத் தகுந்தவனாக, தங்குடி விளங்கநின்ற தன்மையான் - தனது குடியானது சிறப்படையுமாறு பிறந்திருக்கும் பெருமையை யுடையவன், எவன்கொல் என்றான் - யாவனோ என்று கேட்டான். (எ - று.) சுயம்பிரபை மிகுந்த சிறப்புடையாள் என்பதை அரசன் முன்னீரண்டடி களால் பெறவைத்தான். கொங்கு-தேன்; ஈண்டு தேனிறாலுக்கு ஆகுபெயர். தனது குடியை விளக்கப் பிறந்தவள் என்பான் குன்றின் கொழுஞ்சுடர் விளக்கிட்டாங்கு என்று உவமை எடுத்தோதினான். குலப்பெருமை குறிப்பான் வயிரக்குன்றின் உவமை கூறினான். |
(இ - ள்.) இறையிவை மொழியக் கேட்டே - அரசனானவன் மேற்கூறியவாறு சொல்லியதைக் கேட்டு; இருந்தவர் - அமைச்சர்கள், இறைஞ்சி ஏத்தி - அரசனைத் தொழுது போற்றி, அறைகழல் அரவத்தானை - ஒலிக்கின்ற வீரக்கழலைக் கட்டிய போர் மறவர்களைக்கொண்ட பேரொலி பொருந்திய படையையும், அணிமுடி - அழகிய முடியையும் உடைய, அரசர் ஏறே - அரசர்கட்குச் சிங்கவேறு போன்றவனே! நிறைபுகழ் உலகம் காத்து - நிறைந்த புகழையுடைய இவ்வுலகத்தைப் பாதுகாத்து; நின் இறைமை நிலாக என்று - உன்னுடைய அரசுரிமையானது நீடுழி வாழ்வதாக என்று வாழ்த்துரை கூறி, முறை முறை மொழியலுற்று - வரன்முறையாகப் பதிலுரைத்தற்கு, முன்னிய முகத்தர் ஆனார் - முற்பட்ட முகமடையவர்களானார்கள் (எ - று.) |