பக்கம் : 201
 

     (இ - ள்.) உருவத்தார்மேல் - அழகிய மாலையின்மீது, பூணும் நூல் பொலிந்து
தோன்றும் பொன்வரை மார்ப! - அணிகின்ற நூலானது விளங்கித் தோன்றும் பொன்மலை
போலும் மார்பை யுடையவனே, கோணை நூற்று - பிறருக்குத் துன்பத்தைச் செய்து,
அடங்க மாட்டாக் குணமிலார் குடர்கள் நைய - கீழ்ப்படிதலற்ற நற்குணமில்லாதவர்களின்
குடர்குழம்பும்படி, ஆணை நூற்று - கட்டளைகளைப் பிறப்பித்து, அடங்கச் சுரக்கும் அரசர்
தம் அருளினால் - எல்லாவற்றையும் ஒருங்கே புரக்கும் அரசர்களுடைய தண்ணளியினால்,
நூல்பேணும் புலவர் மாண்பும் - அறநூல்களைப் போற்றுகின்ற அமைச்சர்களுடைய
பெருமையும்; பெருகுவது என்றான் - வளர்வதாகும் என்று கூறினான், (எ - று.)
புலவர் ஈண்டு அரசியலறிவுமிக்க அமைச்சர்களை உணர்த்தி நின்றது.

சூரியன் ஒளியாலே சூரியகாந்தம் ஒளி கால்வது போன்றே அரசன் அருளாலே
அமைச்சரும் அறிவுரை கூறுந் தகுதியை உடைய வராகின்றனர். ஆதலால் அமைச்சர்
மாண்பிற்கு அரசர் அருளே காரணமாகும் என்று மன்னனைப் பாராட்டிப் பேசியபடியாம்.

( 20 )

திங்கள் தோன்றினால் சந்திரகாந்தக்கல் நீரினை வெளிப்படுத்தும்

260. சூழ்கதிர்த் தொழுதி மாலைச் சுடர்ப்பிறைக் கடவு
டோன்றித் தாழ்கதிர் சொரிந்த போழ்திற் சந்திர காந்த மென்னும்
வீழ்கதிர் விளங்கு வட்டம் வெள்ளநீர் விரியு மன்றே
போழ்கதிர் பொழிந்து பொங்கிப் 1புலானிணம் பொழியும்வேலோய்
 

     இதுவும் அடுத்த செய்யுளும் ஒருதொடர்

     (இ - ள்.) போழ்கதிர் - இருளைப் பிளக்கும் ஒளியை, பொங்கி பொழிந்து - மிக்கு
வெளிப்படுத்தி, புலால் நிணம் பொழியும் வேலோய் - பகைவர் புலாலாகிய ஊனைச்
சிந்துகிற வேற்படையை யுடையவனே, கதிர்த் தொழுதி மாலைசூழ் - ஒளிப்பிழம்பின் கூட்ட
வரிசையால் சூழப்பெறுகின்ற, சுடர்ப் பிறைக் கடவுள் தோன்றி - வெள்ளிய பிறைத்திங்கள்
எழுந்து,


(பாடம்) 1. புலர் நிணம்.