பக்கம் : 202
 

தாழ்கதிர் சொரிந்த போழ்தில் - வீழாநின்ற ஒளிப்பிழம்பை வெளிப்படுத்திய காலத்தில்,
வீழ்கதிர் விளங்கு சந்திரகாந்தம் என்னும் வட்டம் - விழுகின்ற ஒளியானது விளங்குகின்ற
சந்திரகாந்தக் கல்லானது, வெள்ளம் நீர் விரியும் - மிகுதியான நீரைப்பொழியும் (எ - று.)
அன்றே: அசை.

தொழுதி - திரள் - மாலை - ஒழுங்கு; இயல்புமாம். தாழ்கதிர் - வினைத்தொகை.
சந்திரகாந்தம் - திங்கள் ஒளிப்பட்ட உடன் நீர்காலு மியல்புடைய தொருகல்.

( 21 )

நூலோர் சூழ்ச்சி அரசர் பெருமையால் சிறக்கும்

261. கண்ணளித் துலக மெல்லாங் கவின்பெறக் காவல் பூண்டு
1தண்ணளித் தயங்குஞ் செங்கோற் றாரவர் தவத்தி னாலே
மண்ணளித் தினிய நூலோர் மந்திர மலரு மென்றான்
விண்ணளித் திலங்கும் வெள்ளி விரிந்தவெண் குடையினாற்கே
 

     (இ - ள்.) விண் அளித்து இலங்கும் வெள்ளி - விண்ணுலகத்தைப் பாதுகாத்து
விளங்கும் சுக்கிரனைப்போல, விரிந்த வெண்குடையினாற்கு - விரிக்கப்பெற்று விளங்குகின்ற
வெண்கொற்றக் குடையையுடைய அரசனுக்கு; உலகம் எல்லாம் கவின்பெறக் காவல்பூண்டு -
உலகங்களையெல்லாம் சிறப்புடன் பாதுகாக்கும் கடமைப்பாட்டை மேற்கொண்டு, கண்
அளித்து - கண்போலப் பாதுகாத்து, தண் அளி தயங்கும் - இனிய அருளானது
விளங்கப்பெறுகிற, செங்கோல் தாரவர் தவத்தினால் - செங்கோலையும் மாலையையுமுடைய
அரசர்களின் சிறப்பால், இனிய நூலோர் மந்திரம் - நல்ல அமைச்சர்களுடைய
சூழ்ச்சியானது, மண்அளித்து மலரும் என்றான் - உலகத்திற்கு நன்மையைச் செய்து
சிறப்படையும் என்று கூறினான் (எ - று.)

அரசர்களுடைய சிறப்பினாலேதான் அமைச்சர்களுடைய சூழ்ச்சி பயனடையும் என்று
கூறுகின்றான்.

( 22 )


(பாடம்) 1. தண்ணளி தயங்கு.