பக்கம் : 203
 

பொறுமையின் பெருமை

262.

கண்ணிய கடாத்த வேழங் கவுளினா னுரிஞப் பட்டுத்
தண்ணிய தன்மை நீங்காச் சந்தனச் சாதி போலப்
புண்ணியக் கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப வாயின்
மண்ணியல் வளாக மெல்லாம் வழிநின்று வணங்கு மன்றே.
 

     (இ - ள்.) கண்ணிய கடாத்த வேழம் - பெருமையையுடைய மதம்பொருந்திய
யானையினது, கவுளினால் உரிஞப் பட்டும் - கன்னத்தினால் உராய்ந்து தேய்க்கப்பட்டும்,
தண்ணிய தன்மை நீங்கா - இனிய குணமானது கெடாத, சந்தனச் சாதிபோல - சந்தன
மரங்களைப் போல, புண்ணியக்கிழவர் - நல் வினைக்குரியவர்களாகிய அரசர்கள், கீழோர்
பிழைத்தன பொறுப்ப ஆயின் - அமைச்சர் முதலிய கீழானவர்கள் செய்த பிழைகளைப்
பொறுப்பார்களாயின், மண்இயல் வளாகம் எல்லாம் - மண்திணிந்தமைந்த உலகங்களிலுள்ள
உயிர்த்தொகைகளெல்லாம் வழிநின்று வணங்கும் - அவ்வரசன் வழிப்பட்டு நின்று
அவனைப் பணியும், (எ - று.) அன்றே; அசை.

சந்தனமரங்கள் தேய்ப்புண்ட விடத்தும் சிறந்த மணத்தை வெளிப்படுத்தும். அதனால்
சந்தனத்தின் பெருமை வெளியாம். அதனைப் போல் அரசர்கள் சிறியோர்களுடைய
பிழைகளை, அஃதாவது இகழ்தல் முதலியவைகளைப் பொறுப்பார்களாயின்
உலகத்துயிர்களெல்லாம் அவர்கள் வழிப்பட்டு நிற்கும் என்க.

( 23 )

அரசன் கொடியவனாயின் உலகம் துன்பத்தை யடையும்

263. நிறத்தலை மயங்க வெம்பி நெடுங்கடல் சுடுவ தாயின்
இறந்தலை மயங்கு நீர்வா 1ழுயிர்க்கிட ரெல்லை யுண்டோ?
மறந்தலை மயங்கு செவ்வேன் மன்னவன் வெய்ய னாயின்
அறந்தலை மயங்கி வைய மரும்பட ருழக்கு மன்றே.
 

     (இ - ள்.) நெடுங்கடல் - நீண்ட பெரிய கடலானது, நிறம் - தன்னுடைய
இயல்பானது, தலைமயங்க - மாறுபாட்டையடைய, வெம்பி - கொதித்து, சுடுவதாயின் -
வருத்துவதானால், இறந்து அலை மயங்கு நீர் வாழ் உயிர்க்கு - மிகுதியாக
அலைகள்பொருந்திய கடலிலே வாழுகின்ற மீன்முதலிய நீர்வாழ் உயிர்களின்,
இடர்-துன்பத்திற்கு, எல்லைஉண்டோ - ஓர் அளவு உண்டாகுமோ? மறம் - வலிமையானது,
தலைமயங்கு - மிகுதியாக


 (பாடம்) 1. உயிர்க்கிடை யெல்லை.