அமைந்துள்ள, செவ்வேல் மன்னவன் வெய்யன் ஆயின் செம்மையான வேற்படையை ஏந்திய அரசனானவன் கொடியவனானால், அறம் - நன்னிலையானது; தலைமயங்கி - சுழற்சியையடைந்து, வையம் - உலகத்துயிர்கள், அரும்படர் உழக்கும் - பொறுத்தற்கரிய துன்பத்தை யடையும் (எ - று.) அன்றே : அசை. கடல் வெதும்பியவிடத்து அதனில் வாழ் உயிர்த் தொகைகள் யாவும் துன்பத்தை யடைதலைப்போல், அரசன் தீயவனாயின் உலகத்துயிர்கள் யாவும் கொடிய துன்பத்தையடையும் என்க. |
(இ - ள்.) அரசர் தங்கள் - அரசர்களுடைய, விண்குளிர்கொள்ள ஓங்கும் வெண்குடை - விண்ணுலகமும் இன்பத்தை யடைதற்குக் காரணமாகச் சிறந்து விளங்குகின்ற வெண்கொற்றக் குடையானது, மண் குளிர் கொள்ளக் காக்கும் மரபு ஒழிந்து - நிலவுலகம் இன்பத்தையடையுமாறு புரக்கும் வரன்முறையினின்று நீங்கி, வெதும்பும் ஆயின் - உயிர்களை வருத்தத் தொடங்குமானால், கண் குளிர் கொள்ளப் பூக்கும் - கண்ணானது மகிழ்ச்சியை அடையுமாறு மலரும், கடிகயத் தடமும் - மணம்பொருந்திய பெரிய தடாகங்களும், காவும் - பூஞ்சோலைகளும், தண் குளிர் கொள்ளுமேனும் - மிகுந்த குளிர்ச்சியைக் கொண்டிருந்தனவாயினும், தாம் - அவைகளும், மிக வெதும்பும் - மிகக் கொதிப்பைக் கொண்டன வேயாம் (எ - று.) அன்றே : அசைநிலை. அரசன் எவ்வழி குடிகள் என்பவாகலின், எல்லாப் பொருள்களும் அரசனைப்போல் விளங்கும் என்க. விண்குளிர் கொள்ளலாவது, செங்கோல் மன்னன் நாட்டில் நிகழும் விழா, வழி பாடு வெள்வி முதலியவற்றால் தேவர்கள் மகிழ்தல், விண் தேவர்கட்கு ஆகுபெயராய் நின்றது. |