பக்கம் : 205
 

அரசன் தீயவனாயின் மக்கட்குப் புகலிடமில்லை

265.

தீயினம் படர்ந்து வேந்தன் செறுவதே புரியு மாயிற்
போயினம் படர்ந்து வாழும் புகலிட மின்மை யாலே
வேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப் புல்வாய்
மாயினம் படர்ந்த தெல்லாம் வையகம் படரு மன்றே.
 

     (இ - ள்.) வேந்தன் தீயினம் படர்ந்து - அரசனானவன் தீயோர் கூட்டத்துடனே
கூடிக்கொண்டு, செறுவதே புரியும் ஆயில் - மக்களை வருத்துதலையே செய்வான் ஆனால்,
இனம் போய்ப் படர்ந்து வாழும் - பின்னும் வேறு இடஞ்சென்று அமர்ந்து வாழ்தற்கு, புகல்
இடம் இன்மையாலே - அடைக்கலமான இடம் இல்லாதபடியினாலே, வேய்இனம் படர்ந்த -
மூங்கிற் குலங்கள் பரவிய, சாரல் வேங்கையை வெருவி - மலைப் பக்கத்திலே இருந்த
வேங்கைப்புலிக்கு அஞ்சி, புல்வாய் - மான்களும், மா இனம் - மற்றைய விலங்கினங்களும்,
படர்ந்தது எல்லாம் - அடைந்த துன்பங்களையெல்லாம், வையகம் படரும் - உலகத்து
உயிர்களும் அடையும் (எ - று.) அன்றே : ஈற்றசை.

மலையை அடுத்து விளங்கிய ஒரு காட்டில் கொடிய வேங்கை யொன்று விலங்குகளைக்
கண்டவாறு அடித்துத் தின்றுகொண்டிருந்தது. அக்காட்டிலிருந்த மான்களும் பிற
விலங்குகளும் ஒன்று கூடி வேங்கையின் கொடுமையினின்றும் தப்புவதற்கு வழி யாது என்று
எண்ணமிட்டன. பிறகு அவைகளெல்லாம் வேறு காட்டிற்குச் சென்று விடுவதென்று முடிவு
செய்து அவ்வாறே சென்றன. புதிதாகச் சென்ற காட்டிலே ஒரு கொடிய அரிமா (சிங்கம்)
இருந்தது. அச்சிங்கம் முன் காட்டிலிருந்த வேங்கைப்புலிகளைக் கண்டு மிக மகிழ்ந்து
அவைகளையெல்லாங் கொன்றுதின்று தீர்த்தது. ஆகையால் ஓர் அரசன் கொடியவனாக விருப்பின் அவன் கொடுமைக் காற்றாத மக்கள் பிற நாடுகட்குச் சென்று அங்குள்ள
கொடுங்கோல் அரசர்களால் நெடுந்துன்பமடைந்து அழிந்து ஒழிவார். ஆதலால், “போயினம்
படர்ந்து வாழும் புகலிட மின்மையாலே“ என்றார்.

( 26 )

அறவழி நிற்கும் அரசன் அடிநிழலே அருந்துணை

266. மறந்தலை மயங்கி வையத் தொருவரை யொருவர் வாட்ட
விறந்தலை யுறாமை நோக்கி யின்னுயிர் போலக் காக்கும்
அறந்தலை நின்ற வேந்த ரடிநிழ லன்றி யார்க்கும்
சிறந்ததொன் றில்லை கண்டாய் திருமணி திகழும் பூணோய்.