பக்கம் : 209
 

     (இ - ள்.) கண்சுடர் கனலச் சீறும் - கண்களினின்றும் தீப்பொறியானது சிதறுமாறு
சினக்கின்ற, கமழ்கடாக் களிற்று வேந்தே - மணங்கமழும் மதத்தையுடைய
ஆண்யானையையுடைய அரசனே!, தண்சுடர்க் கடவுள்போல் - குளிர்ந்த ஒளியையுடைய
திங்களைப்போல, தாரகைக் குழாங்கள் - விண்மீன்களின் கூட்டங்கள், தாமே விண்சுடர்
விளக்கமாக விளங்கல - தாங்களொருங்கு கூடினும் திங்கள்போல் விண்ணினிடத்தில்
பேரொளியோடு விளங்கமாட்டா; அவ்வாறே, வேந்தர் போல - அரசர்களைப்போல,
மண்சுடர் வரைப்பில் - மண்விளங்கு முலகத்தின் கண்ணே, மிக்க மக்களும் இல்லை -
சிறந்த மக்கட் பிறப்பினரும் இலராவர், கண்டாய் - அறிந்து கொள்வாயாக. (எ - று).

உடுக்கள் பல ஒருங்கு கூடினும் திங்களைப் போன்று சிறந்து திகழ மாட்டாமை போல,
மக்கள் பலர் ஒருங்கு கூடி எத்தகைய மாண்புமிக்க செயலைப்புரியினும் அரசர்களைப்
போல் சிறந்து திகழமாட்டார்கள் என்க.

( 31 )

அருந்தவமும் அரசாட்சியும் ஒன்று என்றல்

271. அருந்தவ மரைச பார மிரண்டுமே யரிய தம்மை
வருந்தியு முயிரை யோம்பி மனத்தினை வணக்கல் வேண்டும்
திருந்திய விரண்டுந் தத்தஞ் செய்கையிற் றிரியு மாயிற்
பெருந்துயர் விளைக்கு மன்றே பிறங்குதார் நிறங்கொள் வேலோய்.
 

     (இ - ள்.) பிறங்குதார் - விளங்குகின்ற மாலையினையும், நிறங்கொள் - பகைவர்
குருதியாற் செந்நிறத்தினையுங்கொண்ட, வேலோய் - வேற்படையையுமுடைய அரசனே!
அருந்தவம் - அருமையான தவத்தைத் தாங்குதலும், அரைச பாரம் - அரசாட்சிச்
சுமையைத் தாங்குதலும் ஆகிய, இரண்டுமே அரிய - இவ் இரண்டுசெயல்களுமே
உலகத்தின்கண் செய்தற் கரியவைகளாம், தம்மை வருந்தியும் - தம்மை வருத்தப்படுத்தியும்,
உயிரையோம்பி - மன்னுயிரைப் பாதுகாத்தும், மனத்தினை வணக்கல் வேண்டும் - மேலும்
தம் உள்ளமானது அதன் வழியே ஓடாது தம்வழியே வருமாறு வசமாக்குதலும் வேண்டும்,
திருந்திய இரண்டும் - திருத்தமாகச