பக்கம் : 212
 

     (இ - ள்.) எரிதவழ்ந்து இலங்கும் வேலோய் - ஒளிமிகுந்து விளங்குகின்ற
வேற்படையை யுடையவனே, உரிதினின் - உரிமையாக, ஒருவன்செய்த ஊழ்வினை
உதயஞ்செய்து - ஒருவன் உரிமையிற்செய்த பழவினையானது இம்மையில் தோன்றி,
விரிதலின் - பெருக்கத்தை யடைதலால், அதனது உண்மை விளங்கினாற்போல -
அவ்வூழ்வினையின் மெய்ம்மையானது வெளிப்பட்டாற்போல, வேந்தர் கருதிய கருமச்சூழ்ச்ச
 - அரசர் செய்வதற் கெண்ணிய செயற்குரிய சூழ்ச்சியானது, பயத்தினால் கருதும் வண்ணம்
- காரியத்தின் பயனாலே வெளிப்படும்படி, எண்ணுவது எண்ணம் என்றான் - ஆராய்ந்து
துணிவதே சிறந்த ஆராய்ச்சியாவது என்று கூறினான். (எ - று.)

ஊழுண்மை விளைவின்கண் வெளிப்படுதல் போன்று சிறந்த சூழ்ச்சியின் சிறப்புப் பயனால்
வெளிப்படும். அங்ஙனம் பயன்தருமாறு ஆராய்தலே சிறந்த சூழச்சியாம் என்று சூழ்ச்சியின்
மாண்பு கூறினான்.

இதுவுமது

275. பஞ்சிநன் றூட்டப் பட்ட மாதுளம் பருவ வித்து
மஞ்சிநின் றகன்ற சாகை மலரிடை வடிவு காட்டும்
அஞ்சிநின் றனலும் வேலோய் சூழ்ச்சியு மன்ன தேயால்
வெஞ்சொலொன் றுரைக்க மாட்டா விடுசுடர் விளங்கு
பூணோய்.
 

     (இ - ள்.) அஞ்சிநின்று அனலும் வேலோய் - கண்டோர் அஞ்சி நிற்கும்படி எரியும்
வேற்படையை யுடையவனே!; வெஞ்சொல் ஒன்று உரைக்கமாட்டா - கொடுஞ் சொல்
ஒன்றும் பேசுதலறியாத, சுடர்விடு விளங்கு பூணோய் - ஒளிவிட்டு விளங்குகின்ற
அணிகலன்களைத் தாக்கியவனே;, பஞ்சி நன்று ஊட்டப்பட்ட - காரரக்கையாதல்
செவ்வரக்கையாதல் குழம்புசெய்து பஞ்சாலே நன்றாகப் பூசப்பட்ட, மாதுளம் பருவ வித்தும்
- மாதுளமரத்தினது முதிர்ந்த விதைதானும், மஞ்சி நின்று - மழைவளம் நிற்றலாலே,
அகன்ற சாகை - விரிந்து தழைத்ததன் கிளைகளில் தோன்றும், மலரிடை - பூக்களிடத்தே,
வடிவு காட்டும் - தன்மேற் பூசப்பட்ட நிறத்தினை வெளிப்படுத்தாநிற்கும், சூழ்ச்சியும் -
அரசியலுக்குரிய சூழ்ச்சியும் அன்னது ஏ ஆல் - அத்தகையதொரு தன்மையதாம். (எ - று.)