பஞ்சி - செம்பஞ்சுக் குழம்பு, கரும்பஞ்சுக் குழம்புமாம். மஞ்சி - முகில். மஞ்சி நிற்ப என்க. அத்தகைய தன்மையாவது - விதையில் ஊட்டப்பட்ட நிறம் மலரிடைத் தோன்றுவது போன்று, சூழ்ச்சியில் அமைக்கப்பட்ட கருத்தே செயலில் பயனாய் விளையும் தன்மை. மாதுளம் வித்தில், செவ்வரக்குப் பூசிப்புதைத்தால் செந்நிற மலரும், காரரக்குப் பூசிப் புதைத்தால் கரிய நிற மலரும் தோன்றும் என்ப. இதனை, “மாதுளம் பீசமுண் மாணரக்கின் நிறம் போதுள்ளம் காண்பது போலமற் றென்றான்“ என்னும் நீலகேசிச் செய்யுளானும், “ஒரு மாதுளை வித்தில் காரரக்கும், ஒரு மாதுளை வித்தில் செவ்வரக்கும் பூசிப் பூமியுள்ளிட தத்சந்தானமாகிய பூவிற் கருமையும் செம்மையும் ஆன நிறம் தோன்றியவாறு“ என்னும் அதன் உரையானும் உணர்க. (நீலகே - புத்தவா - செய். 576.) |