பக்கம் : 214
 

எல்லா மாண்புகளும் இனிது நிறைந்த நின் முன்னர் யாங்கள் கூறுவன அறிஞர்மாட்டு
அறிவிலார் கூறும் பொருளில் உரையைப் போல் பயனிலவாம் என்க.

மன்னர்க்கோதுங் குணமாவன. அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடைமை, மறனிழுக்கா மானம் முதலியன.

( 37 )

செவ்வி கேட்டல்

277. தேன்மகிழ் தெரிய லாய்நின் றிருக்குலந் தெளிப்ப வந்த
1பான்மகிழ்ந் தனைய தீஞ்சொற் பவழவாய்ப் பரவை யல்குல்
வான்மகிழ் மணங்கொண் மேனி யணங்கினுக் குரிய கோனை
யான்மகிழ்ந் துணர்த்தக் கேட்பி னிடைசிறி தருளு கென்றான்.
 

     (இ - ள்.) தேன்மகிழ் தெரியலாய் - வண்டுகளானவை மகிழ்ந்து மொய்கின்ற
மாலையை அணிந்தவனே!, நின் திருக்குலம் தெளிப்பவந்த - நின்மேலான குலத்தை
விளங்குமாறு செய்தற்குத் தோன்றிய, பால்மகிழ்ந்தனைய தீஞ்சொல் - பாலின்
இனிமையைப்போல் மகிழ்ச்சியை உண்டாக்குகின்ற இனிய சொல்லையும், பவழவாய் -
பவழம்போற் சிவந்த வாயையும், பரவை அல்குல் - பரந்த அல்குலையும், வான்மகிழ்
மணங்கொள் மேனி - வானுலகத்தாரும் மகிழ்தற்கிடமாகிய மணத்தினைக் கொண்ட
உடலினையும் உடைய, அணங்கினுக்கு உரியகோனை சுயம்பிரபைக்கு உரிய தலைவனை,
கேட்பின் யாவனென்று - வினாவின் யான் மகிழ்ந்து உணர்த்த - யான் மகிழ்ச்சியோடு
விடை கூறுதற்கு, சிறிது இடை அருளுக என்றான் - செவ்வி சிறிது கொடுத்தருள்க என்று
கூறினான் (எ - று.)

தேன் - வண்டு. தெளிப்ப - விளக்க. வான்மகிழ்மணம் - சிறந்த மகிழம்பூ மணமுமாம்.
அணங்கு - சுயம்பிரபை. கோனை - என்றது தலைவனை என்றவாறு.
மேலே சுச்சுதன் தன் கருத்தை விரித்துரைக்கின்றான்.

( 38 )

(வேறு)
விஞ்சையர் சேடி வண்ணனை

278. மஞ்சிவர் மால்வரைச் சென்னி வடமலை
விஞ்சையர் வாழும் விழாவணி நல்லுல 

(பாடம்) 1. பான்மகிழ்த்தினிய.