பக்கம் : 218
 

     (இ - ள்.) கதிர் மணிக்குன்றம் - ஒளியுடைய அழகிய அவ்வடமலையின் மிசை,
மணிக்கற் படாதன - மணிகளாகிய கல்லாற் றளமிடப்படாதனவாகிய, மண்டபம் -
அம்பலங்கள், செம்பொன் - பொன் னம்பலங்களே ஆகும்; அவைதாமும், குணிக்கப்படாத
- அளவிடப் படாதனவாகும், குளிர்புனல் நீத்தம் - அம்மலைமிசையுள்ள குளிர்ந்த
நீரையுடைய நீர்நிலைகளும், கணிக்கப் படாத - எண்ணத் தொலை யாதனவாகும், அவை
பெற்றால் - அவற்றை எய்தப் பெற்றால், பிணிக்கப் படாதவர் - அவற்றால் கவரப்படாத
நெஞ்சையுடையோர், யார் - யாரே உளர், ஒருவருமிலர் (எ - று.)

மணிக்கற் படாதனவாகிய மண்டபங்கள் செம்பொன் மண்டபங்களே. எனவே ஏனைய
மண்டபங்கள் அனைத்து மணித்தளமிடப் பட்டனவே என்பது கருத்தாகக் கொள்க.
பொன்னம்பல முழுதும் பொன்னாலேயே இயற்றப்படுதலின் மணிக்கற் படாதனவாயின
என்க. குளிர்புனல் நீத்தம் என்றது ஆண்டுள்ள இயற்கை நீர்நிலைகளை என்க. குணித்தல்,
கணித்தல் இரண்டும் ஒரு பொருளன. இச்செய்யுள் மிகுந்த பாடபேதமுடையதாகவுளது.
அவையாவன -1. மணிக்கற் பட்டாரண; மணிக்கற்பட்டாரண்; 2. அணிக்கற் படாத
அலைபுன; குணிக்கற்படாத; கணிக்கப்பட்டாம் வலை; கணிக்கப்படா வலை. 3.
ஈர்மணிக்குன்றம். 4. வாய்மையைப் பேற்றார், வாய்மையைப் பெற்றால், யாரவைப் பேற்றால்.

( 44 )

வடசேடியில் அறுபது பெரிய நகரங்கள்

284. ஆங்கதன் மேல வறுபது மாநகர்
தீங்கதிர் மண்டிலஞ் சேர்ந்து திளைப்பன
நீங்கரு மாநகர் தம்மு ணிலாவிரிந்
தோங்கிய சூளா மணியி னொளிர்வது.
 

      இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர்

(இ - ள்.) தீங்கதிர் மண்டிலம்சேர்ந்து திளைப்பன - உலகத்துயிர்களுக்கு இன்பத்தை
விளைவிக்கும் இனிய ஞாயிற்று மண்டலம்வரை வளர்ந்து சிறந்துள்ளனவாகிய, அறுபது
மாநகர் - அறுபது பெரிய நகரங்கள், ஆங்கு அதன்மேல - அவ்வடசேடியின் மிசை
உள்ளனவாம், நீங்கரு மாநகர் தம்முள் - அடைந்தார் பின்னர் நீங்குவதற்கு அருமையாகிய
அவ்வறுபது நகரங்களுக்குள்ளேயும், நிலாவிரிந்து - ஒளிபரவப்பெற்று, ஓங்கிய
சூளாமணியின் ஒளிர்வது - உயர்ந்தமுடி மணியைப் போல விளங்குவது (எ -று.)