பக்கம் : 219
 

இரத்தின பல்லவ நகரத்தின் சிறப்பைக் கூறத்தொடங்குகிறான். இரத்தின பல்லவம்
அந்நகரங்கள் அறுபதினும் சிறந்தது என்று குறித்தற்கு ஓங்கிய சூளாமணியின் ஒளிர்வது
என்றான். சூளாமணி - முடிமணி. சூளாமணியின் ஒளிர்வது இரத்தின பல்லவம் என்ப
தொன்றுண்டு என (285இல்) அடுத்த செய்யுளில் முடியும்.

( 45 )

இரத்தின பல்லவம்

285. மரத்தினு மண்ணினு மாடங்கள் யாவும்
திருத்தின வில்லது செம்பொ னுலகில்
புரத்தினை வெல்வது பொன்னகர் பூந்தண்
ணிரத்தின பல்லவ மென்பதொன் றுண்டே.
 

     (இ - ள்.) பூந்தண் இரத்தின பல்லவம் என்பது பொன்நகர் ஒன்று உண்டு -
அழகுடையதும் இனிமையுடையதுமாகிய இரத்தின பல்லவம் எனப் பெயரிய அழகிய நகரம்
ஒன்று உண்டு, அந்நகரத்தின் கண்ணுள்ள மாடங்கள் யாவும் - வீடுகளெல்லாம், மரத்தினும்
மண்ணினும் திருத்தின இல்ல - மரங்களாலும் மண்ணாலும் அமைக்கப்பட்டவைகளல்ல
(பொன்னினும் மணியினும் அமைக்கப்பட்டவைகளாகும் அதனால்) செம்பொன் உலகில்
புரத்தினை வெல்வது - அழகுமிக்க தேவருலகில் உள்ள அமராவதியையும் அவ்விரத்தின
பல்லவம் அழகில் தோற்கடிப்பதாகும்
(எ - று.)
இரத்தின பல்லவத்து மாடங்கள் மண் மரம் முதலியவைகளால் ஆக்கப்பெறாது
பொன்னாலியன்றன வென்க.

“கண்ணிலா.........மண்ணினாலியன்றில மதலைமாடமே“ என்றார் நகரச் சருக்கத்தும்.

( 46 )

அந்நகர் விண்ணுலகம் மண்ணுலகில் வந்தாற் போன்றது

286. வளைத்தகை மங்கையர் மைந்தரொ டாடி
முளைத்தெழு காம முடிவில ராகித்
திளைத்தலி னன்னகர் தெய்வ வுலகம்
களித்திழிந் தன்னதோர் கவ்வை யுடைத்தே.