(இ - ள்.) வளைதகை மங்கையர் மைந்தரொடு ஆடி - வளையல் களையுடைய பெருந்தகை மகளிர் தங்காதல் இளைஞர்களுடன் பலவகை விளையாடல்கள் புரிந்து, முளைத்தெழு காமம் முடிவிலராகி - புதிது புதிதாகத் தோன்றியெழுகின்ற இன்பப் பெருக்கிற்கு ஒரு முடிவு காண்கிலராகி, திளைத்தலின் - இன்பத்திலே அழுந்துதலால், நல்நகர் - நல்லநகரமாகிய அந்த இரத்தின பல்லவம், தெய்வ உலகம் - விண்ணுலகமானது, களித்து இழிந்த அன்னதுஓர் கவ்வை யுடைத்து - மகிழ்ச்சியையடைந்து மண்ணுலகில் இறங்கினாற் போன்றதொரு ஆரவார நீர்மையையுடையது. (எ - று.) அந்நகரத்து ஆடவரும் பெண்டிரும் முடிவிலராகி இன்பந் திளைக்கின்றார்களெனவே, அவர்கள் இன்பக்கூடலை விட்ட ஒரு பொழுதும் பிரியாமை பெறப்பட்டது. |
(இ - ள்.) ஆடவர் - (அவ்விரத்தின பல்லவ நகரத்தில்) ஆண்மக்கள், கொம்பு அனையார் - பூங் கொம்பை ஒத்தவரும், இளையாரவர் - இளைமையுடையவருமாகிய, தங்காதல் மகளிர்களின், பாடகம் மெல் ஏர் பரவிய சீறடி - பாடகம் என்னும் அணிகலன் அணியப்பட்ட மென்மையும் அழகும்மிக்க சிறிய அடிகளை, தோடு அலர் தொங்கல் அம் குஞ்சியுள் - இதழ்கள் விரிந்த மலர்மாலைகளை அணிந்த தம்முடைய தலைமயிரின்கண், தோய வைத்து - பொருந்தும்படி வைத்து, ஊடல் உணர்த்தும் - அம்மகளிர்களை இரந்து அவர் ஊடல் தீர்க்கின்ற, தொழிலது ஒன்று உண்டு - ஒருதொழில் உளதாம் (எ - று.) |