நாடா வளமுடைய அவ்வுத்தரசேடியில் வாழ்வோர் உடலோம்பும் பொருட்டு உடல் வியர்க்க வருந்தித் தொழில் செய்யவேண்டியதில்லை என்பது கருத்து. ஊடுதல் காமவின்பத்தை மேலும் மிகுதிப்படுத்தும். ஊடிய மகளிரை உணர்த்துதலும் ஆடவர்க்கு இன்பமே பயக்கும் செயலாம். இக்கருத்தை, “ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப, நீடுக மன்னோ இரா,“ என்னும் திருக்குறளானும் அறிக. காமவேட்கையால் ஊடல் தீருந்துணையும் அல்லலுறுதலின் அதனை வருந்திச் செய்யும் தொழில் என்னும் பொருள்பட வுரைத்தார். |
(இ - ள்.) சிலை - வில்லையுடைய, தடம் - பெரிய, தோளவர் - தோள்களையுடைய ஆடவர்களின், செஞ்சாந்து அணிந்த - சிவந்த சந்தனம் பூசப்பெற்ற, மலைத்தடம் மார்பிடை - மலையைப்போன்ற பெருமையை யுடைய மார்பினிடத்திலே, மைந்தர்க்கண்ணார்தட முலைபாய - மைதீட்டப் பெற்ற களிப்பினையுடைய கண்களமைந்த பெண்களின் பெரிய முலைகள் தாக்குதலானே, முரிந்து முடவண்டு - அவ்வாடவர்கள் மார்பின்கண்ணே அணிந்துள்ள மலர்மாலையின் கண்ணிருந்து நெரிந்து பலவாறு முடமான வண்டுகள், இலைத்தடத்து ஏங்கும் இரக்கம் உளது - தளிராலாகிய படலைமாலையுட் புக்கிருந்து ஏங்காநின்ற வருத்தமும் அந்நாட்டின் கண்ணேயுளது (எ - று.) இவ்வாறு கூறவே அவ்விரத்தின பல்லவத்திலே வேறு வகையினால் வருந்தித் துன்புறுவார் இலர் என்க. இவ்வாறே பிற நூலாசிரியர்களும் நகர்வளம் கூறலைப் பன்னூல்களினும் காண்க. இலை - தளிராலாய படமாலை. |