பக்கம் : 222
 

     (இ - ள்.) வனைந்தனபோலும் வளர்ந்தமுலையார் - செய்து அமைத்தாற் போன்று
பருத்து விளங்குகின்ற கொங்கைகளையுடைய மங்கையர்கள், இன்பக்கனிகள் - காமமாகிய
காழில் கனிகளை, தங்காதலர் - தங்களுடைய காதலர்களானவர்கள், அகம் களித்து -
உள்ளமானது மகிழ்ந்து, காமம் கனிந்து - காம உணர்ச்சி முதிர்ந்து, கலந்துஉண - தம்மோடு புணர்ந்து கூட்டுண்ணாநிற்ப, இனைந்து - அதனால் வருந்தி, முனிந்து -
சினத்தையுடைய, புருவம்பல முரிவ - அம்மங்கையர்களுடைய புருவங்கள் பலவும்
வளைதலையுடையனவாம் (எ - று.)

புருவமுரிவு இன்பநுகர்ச்சியின் களைப்பால் நிகழ்ந்தது. அந்நகரத்திற்கு வேறுவகையான
முரிவுகள் இல்லாமையையுங் கொள்க.

( 50 )

அந்நகரில் இளைப்போரும் கலங்குவோரும்

290. செவ்வாய்ப் பவழக் கடிகைத் திரளெனும்
அவ்வா யமிர்தமுண் டார்பல ராடவர்
ஒவ்வா திளைப்ப ரொசிந்தன ரோடரி
மைவா ணெடுங்கண் மலக்கம் பெரிதே.
 

      (இ - ள்.) செவ்வாய் - இவருடைய சிவந்த வாய்கள், பவழக்கடிகைத் திரள் எனும்
- பவழத்தாலாகிய உண்கலன்களின் திரள் என்று பாராட் டுதற்குக் காரணமான, அ வாய்
அமிர்தம் உண்டார் ஆடவர்பலர் - அழகிய தங் காதன் மகளிரின் இதழூறலை உண்டார்
ஆடவர் பலர், ஒவ்வாது ஒசிந்தனர் இளைப்பர் - அம்மகளிருள் சிலர், அக்கலவிப் போரில்
அவ்வாடவருக்கு ஒவ்வாது ஓசிந்து இளையாநிற்பார், அரிஓடுவாள் மை நெடுங் கண் - அம்
மகளிருடைய வரி படர்ந்த வாள்போன்ற மையுண்ட நெடிய கண்கள்படும், மலக்கம் -
கலக்கம், பெரிது - பெரிதாகும். ( எ - று.)
அந்நகரில் கலவிப்போரில் ஒசிந்து இளைக்கும் மடவாரே இளைப்போர்; பிறர் யாருமிலர்;
கலங்குவன அவர் தம் கண்களே பிறிதில்லை என்றவாறு. கடிகை - உண்கலம் -
துண்டுமாம். மலக்கம் - கலக்கம்.

( 51 )