பக்கம் : 225
 

காதல் தூது

294.

காம விலேகையுங் கற்பக மாலையும்
சேம 1மணிநகைச் செப்பினு ளேந்துபு
தூமக் குழலவர் தூது திரிபவர்
தாமத் 2தெருவிடை தாம்பலர் கண்டாய்.
 

      (இ - ள்.) தாமத் தெருவிடை - அந்நகரத்தின் ஒழுங்கு பட்ட தெருவினிடத்திலே,
தூமக்குழலவர் - அகிற்புகை யூட்டப்பட்ட கூந்தலையுடைய மங்கையர், காம இலேகையும் -
காதலைப்பற்றி எழுதப்பட்ட செய்தியையும், கற்பகமாலையும் - கற்பகப் பூமாலையும், சேம
மணிநகைச் செப்பினுள் ஏந்துபு - பாதுகாப்பு மிகுந்த மணியினால் செய்யப்பெற்ற
ஒளியையுடைய சிமிழுக்குள் வைத்து ஏந்தி, தூது திரிபவர்தாம் பலர் கண்டாய் - தூதாகப்
போய் வருபவர்கள் பலராவர், உணர்ந்து கொள்வாயாக, (எ - று.)

தூது திரிய நேர்ந்தமை ஊடல் விலக்குதற்கு என்க. இலேகை - எழுத்து, காம இலேகை -
காதலைப்பற்றி எழுதப்பட்ட செய்தி.

( 56 )

காமக்கடலைக் கலக்கும் தீமைத்தொழில்

295. தாமத் தொடையல் பரிந்து தமனிய
வாமக் கலங்கள் புலம்ப மகளிர்கள்
காமக் கடலைக் கலக்குங் கழலவர்
தீமைத் தொழிலவை தேர்ந்துள வன்றே.
 

      (இ - ள்.) தாமத் தொடையல் பரிந்து - பூவினாலாகிய மாலைகளை நீக்கி, தமனிய
வாமக்கலங்கள் புலம்ப - பொன்னினால் ஆகிய அழகிய அணிகலன்கள் ஒலித்தலைச்
செய்ய, மகளிர்கள் - பெண்களின், காமக்கடலை - சிற்றின்பக்கடலை, கலக்கும் கழலவர் -
கலங்குமாறு செய்யும் வீரக்கழலை யணிந்த ஆடவர்களின், தீமைத் தொழிலவை - கொடிய
செயல்களானவை, தேர்ந்துள - நன்கு பயிற்சியடைந்துள்ளன, அன்றே: ஈற்றசை, (எ - று.)
இந்தக் காமத்தொழிலைத் தவிரக் கலங்கச் செய்யும் வேறு தீமைத் தொழில், அந்நகரத்தில்
யாதும் இல்லை என்க.

( 57 )


(பாடம்) 1. மணநகை. 2. தெருவிடைத்தாம்.