(இ - ள்.) அரசனே! பொன்நகர் தன்னை ஆள்வான், முற்கூறியவாறு நலங்களெல்லாம் இனிதமைந்த அவ் அழகிய நகரத்தை அரசாட்சி செய்கிறவன், புரந்தரன் அனைய மாண்பின் - தேவேந்திரனைப் போன்ற பெருமையையுடைய, மன்னவன் மயூரகண்டன் - அரசானாகிய மயூரகண்டன் என்பவனாவான், அவன் தேவிமாருள் - அவனுடைய மனைவியர்களுள்ளே, மின்அவிர் மருங்குல் நீலாங்கனை என விளங்கி நின்றாள் - மின்னலைப் போல் விளங்குகின்ற இடையினையுடைய நீலாங்கனை என்று பெயர் விளங்கியிருந்தவள், பட்டத்துத் தேவியாவள், அச்சுவக்கிரீவன் என்பான் அன்னவள் புதல்வன் - அச்சுவக்கிரீவன் என்னும் பெயருடையவன் அவளுடைய மகனாவன், கண்டாய் - தெரிந்துகொள்வாயாக! (எ - று.) அச்சவக்கிரீவனுடைய தகப்பன் மயூரகண்டன் என்பதும், தாய் நீலாங்கனை என்பதும் இதனாற் பெறப்பட்டன. அச்சுவக்கிரீவன் வரலாற்றிற்கு இவ்வாறு தொடக்கஞ் செய்யப்பட்டது. |