பக்கம் : 227
 

     (இ - ள்.) அதிர்கழல் - ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த அடிகளையும், அலங்கல்
வேலோய் - மாலையணியப்படட வேற்படையையுமுடைய அரசனே! அச்சுவக்கிரீவன்
என்னும் - அச் சுவக்கிரீவனென்று பெயர் சொல்லப்பெறுகிற, பொதி அவிழ் பொலம்கொள்
பைந்தார்ப் புரவலன் - கட்டவிழ்ந்து அழகினைக்கொண்ட பசியமாலையை யணிந்த
அவ்வரசன், திகிரி எய்தி - ஆணையுருளையை (ஆக்ஞாசக்கரம்) அடைந்து, மதி
தவழ்குன்றம் எல்லாம் வணக்கியபின்றை - திங்கள் தவழும் வித்தியாதர
மலையரசர்களனைவரையுங் கீழ்ப்படியச் செய்த பிறகு, மண்ணும் - மண்ணுலகமும், கொதி
தவழ் வேலினான்றன் - கொடுமை மிகுந்த வேற்படையையுடைய அச்சுவக்கிரீவனின்,
குறிப்பொடு கூடிற்று - கட்டளையின்படியே நடக்கலாயிற்று, அன்றே: அசைநிலை. (எ - று.)

அச்சுவக்கிரீவன் அரசனாகிய பிறகு மண்ணுலகமும் அனுடைய ஆட்சிக்கு உட்பட்டதாயிற்று
என்று இதனால் உணர்த்தப்பட்டது.

“பொன்னென்கிளவி ஈறுகெட முன்னர்த் தோன்றும் லகார மகாரம்“ என்பதானால் பொன்
என்னும் சொல் பொலம் என்று ஆயிற்று.

( 59 )

அச்சுவக்கிரீவன் தன்னிகரற்ற தனி மன்னன்

298. சுற்றமாண் புடைமை யாலுஞ் சூழ்கதிர்த் திகிரி யாளுங்
கொற்றமாங் குடைமை யாலுங் கலத்தது பெருமை யாலுங்
கற்றமாண் விஞ்சை யாலுங் கருதிய முடித்த லாலும்
வெற்றிவே லவனோ டொப்பார் வேந்தர்மற் றில்லை வேந்தே.
 

      (இ - ள்.) வேந்தே - அரசே! சுற்றம் மாண்புடைமையாலும் - அவனுக்கு உறுதிச்
சுற்றமாயமைந்தவர்கள் பெருமையையுடையவர் களாகையாலும், சூழ்கதிர்த் திகிரியாளும்
கொற்றம் ஆங்கு உடைமையாலும் - புகழ்பாவிய ஆணையுருளையை யுருட்டும் வெற்றி
மிகவும் அமைந்திருப்பதாலும், குலத்தது பெருமையாலும் - நற்குலத்தில் தோன்றிய
சிறப்பினாலும், கற்ற மாண் விஞ்சையாலும் - பயின்றுள்ள பெருமை பொருந்திய
வித்தையாலும், கருதிய முடித்தலாலும் எண்ணியவற்றை எண்ணியாங்கே இனிது
முடித்தலாலும், வெற்றிவேல் அவனோடு ஒப்பார் வேந்தர் - வெற்றி வேற்படையையுடைய
அச்சுவக்கிரீவனோடு நிகரான அரசர்கள், மற்று இல்லை - வேறு ஒருவரும் இலர்,
( எ - று.)