(இ - ள்.) தம்பியர் - அவ்வச்சுவக்கிரீவனுக்கு இளவலா யமைந்தவர்கள், நீலத்தேரான் - நீலரதன், தயங்கு தார் நீலகண்டன் - விளங்குகின்ற மாலையை அணிந்த நீலகண்டன், வம்புயர் மகரப்பேழ்வாய் வயிரமாகண்டன் - தீச்செயல் மிகுந்த மகரமீனின் பெரிய வாயைப்போன்ற வாயினையுடைய வயிரமாகண்டன், வண்டும் தும்பியும் துவைக்கும் தொங்கல் சுகண்டன் - பெண்வண்டுகளும் ஆண்வண்டுகளும் சேர்ந்து துவைக்கப்பெறுகிற மாலையையணிந்த சுகண்டன், என்று இவர்கள் - என்று கூறப்பெறும் இவர்கள் ஆவார், வெம்பிய உருமுத் தீயும் - இவர்கள் மிகுதியாகக் கொதிக்கும் ஊழிக்காலத்து நெருப் பிடியினையும், கூற்றமும் - உயிரையும் உடலையும் வேறுபிரிக்குங் காலனையும், வெதுப்பும் நீரார் கண்டாய் - வருத்தப்படுத்துகிற தன்மையையுடையவர்கள், அறிந்துகொள்வாயாக! (எ - று.) “தம்பியுடையான் படைக்கஞ்சான்“ என்பவாகலின் அச்சுவக்கிரீவனுடைய தம்பியர்களாகிய நீலரதன், நீலகண்டன், வயிரமா கண்டன், சுகண்டன் என்னும் இவர்களுடைய தன்மை இப்பாட்டில் இயம்பப் பட்டது. |