பக்கம் : 229
 
 

விடையமொன் றின்றி வென்ற விடுசுட ராழி யாளும்
நடையவ னுவப்பின் ஞாலம் பிறருழை நடப்ப தென்றான்.
 

     (இ - ள்.) வேந்தே - அரசே!, படையினது அமைதி - படையின் பலம். கூழின்
பகுதி - பொருளின் நிலைமை, என்று இவற்றின் பன்மாண் புடையவர் - என்று
கூறப்பெறும் இவற்றினாற் பெருஞ் சிறப்புடையவர், அவனொடு ஒப்பார் மற்று ஒருவர்
இல்லை - அவனுக்கு நிகரானவர் வேறொருவரும் இலர், விடயம் ஒன்று இன்றி வென்ற -
கை கூடப்பெறாத பொருள் ஒன்றுமில்லாமல் எல்லாவற்றையும் வெற்றியாக அடைந்த,
சுடர்விடு ஆழி யாளும் நடையவன் - ஒளியை வெளிப்படுத்தும் உருளைப்படையைத்
தாங்கிய அவ்வச்சுவக்கிரீவன், உவப்பின் - மகிழ்ச்சியையடைந்தால், ஞாலம் பிறர் உழை
நடப்பது என்றான் - உலகமானது மற்றவர்களிடத்திலே அரசாட்சி செய்யப் பெறுதலை
யடையுமென்று கூறினான், (எ - று.)

அவ்வச்சவக்கிரீவனுக்கு மகிழ்சியுண்டாகுமாறு நடப்பவர்களே அரசாட்சி பெறுவர் என்பது
 கருத்து.

( 62 )

அமைச்சனும் நிமித்திகனும்

301. ஆணைநூ லமைச்ச னாவா னரிமஞ்சு வவன தாற்றல்
1கோணைநூற் பவரைத் தன்சொற் குறிப்பின்மே னிறுத்தவல்லான்
பேணுநூ னிமித்தம் வல்லான் சதவிந்து பெரிய நீரான்
காணுநூற் புலமை யாருங் காண்பவ ரில்லை கண்டாய்.
 

     (இ - ள்.) அவ்வச்சுவக்கிரீவனுக்கு, அரிமஞ்சு - அரிமஞ்சு என்னும்
பெயரையுடையவன், ஆணைநூல் அமைச்சன் ஆவான - அறநூல்களை நன்குணர்ந்த
அமைச்சனாக அமைந்திருக்கின்றான், அவனது ஆற்றல் - அவனுடைய வலிமையானது
எத்தன்மையது என்றால், கோணை நூற்பவரை - கொடுமைகளைச் செய்பவர்களை,
தன்சொல் குறிப்பின்மேல் நிறுத்த வல்லான் - தன் சொல்லின் வழியே நிற்குமாறு செய்யக்
கூடியவன், மற்றும், பேணும் நூல் நிமித்தம் வல்லான் - அவனுக்கு முக்காலமு முரைக்கும்
நிமித்திகனாக அமைந்துள்ளவன் எல்லோரும் போற்றும் நிமித்த நூலிலே
ஆற்றலையுடையவன். சதவிந்து - சதவிந்து என்னும் பெயரினையுடைவன்,


(பாடம்) 1. கோணை நூற்றவரை.