பெரிய நீரான் - அவன் முக்காலமுங்கூறும் பேராற்றல் அமையப் பெற்றவன், காணும் நூற்புலமை - அவனறிந்துள்ள நிமித்த நூல் அறிவை, யாரும் காண்பவர் இல்லை - யாரும் இவ்வளவென்று அளந்தறிபவர் இலர், கண்டாய் - தெரிந்துகொள்வாயாக, (எ - று.) இச்செய்யுளால் அச்சுவக்கிரீவனுடைய அமைச்சன் திறமும் சோதிடன் திறமும் கூறப்பட்டன. அறிவு நலம் செறியப்பெற்ற அமைச்சனையும் நிமித்திகனையும் துணையாகவுடையவன் எதற்கும் அஞ்சான் என்பது குறிப்பு. |
(இ - ள்.) மன்னா - அரசனே!. சார்ந்தவர் - அவனையடைந்தவர்கள், தன் அலால் தெய்வம் பேணார் - அவனையல்லாமல் வேறு தெய்வத்தைப் போற்றமாட்டார்கள், தானும் - அவ்வச்சுவக்கிரீவனும், என் அலால் இவருக்கு உற்றார் இல்லை யென்று - என்னையல்லாமல் இவர்களுக்குப் பற்றுக் கோடானவர்கள் வேறு எவரும் இலர் என்று, சார்ந்தார்க்கு இரங்கும் நீரான் - தன்னையடைந்தார் மாட்டு அருள் சரக்குந்தன்மையையுடையவன், பொன் எலாம் - பொன்களையெல்லாம் (ஒன்பான் வகைமணிகளையும்) நெதியம் - செல்வமாக (திறைப்பொருளாக எனினும் ஆம்), ஆர - மிகுதியாக, பொழிந்திடுகின்ற - சொரிகின்ற, பூமி மன்எலாம் - நிலவுலகத் தரசர்களனை வரும், அவனையன்றி வணங்குவது இல்லை - அம்மன்னனை யல்லாமல் வேறே கடவுளரைப் போற்றுவதும் இல்லை, (எ - று.) உலகத்தார்கள் அச்சுவக்கிரீவனைத் தெய்வமாகப் போற்றுகிறார்கள். அச்சுவக்கிரீவனும் தன்மாட் டன்புடையார்களைப் பாதுகாக்கின்றான் என்று அமைச்சன் அரசனுக்குக் கூறுகின்றான். |