பக்கம் : 232
 

யுடைய சுயம்பிரபை பிறப்பதற்கு முன்பு, நாம் ஆண்டது எல்லாம் - நாம் அரசாட்சிசெய்த
தெல்லாம், அவன் செற்று நலிதல் அஞ்சி - அம்மன்னவன் சினந்து வருத்துதலுக்கு அச்சங்
கொண்டு, திறைகொடுத்து - கப்பப்பொருள் கொடுத்து, அறிவித்தன்றே - யான்
அவனடிப்பட்டமையை அவனுக்குத் தெரிவித்தமையாலன்றோ? (எ - று.)

நாமும் அந்த அச்சுவக்கிரீவனுக்கு அஞ்சித் திறை செலுத்தித் தான் வாழ்ந்திருந்தோம்
என்று அமைச்சன் அரசனுக்குக் கூறுகின்றான்.

( 66 )

சுயம்பிரபை பிறந்த பிறகு அவன் திறைகொள்ளவில்லை
யென்றல்

305. 1ஈங்குநங் குலம்கொம் பொப்பாள் பிறந்தபி னினிய னாகித்
தேங்கம ழலங்கல் வேலோன் றிறைகொள லொழிந்து செல்லு
மாங்கவன் றிறங்க ளெல்லா மறிதியா 2லாணை வேந்தே
தீங்கியா னுணர்த்திற் றுண்டோ திருவடி தெளிக வென்றான்.
 

     (இ - ள்.) ஆணைவேந்தே - அரசாட்சிக் கட்டளையைப் பிறப்பிக்கும் அரசனே!
ஈங்குநம் குலம்கொம்பு ஒப்பாள் பிறந்தபின் - இங்கு நம்முடைய குலத்தின்
கொழுந்துபோல்வாளாகிய சுயம்பிரபையானவள் பிறந்த பிறகு, இனியன் ஆகி - நமக்கு
இன்பத்தைச் செய்பவனாகி, தேங்கமழ் அலங்கல் வேலோன் - மணம் வெளிப்படுகிற
மாலையை அணிந்த வேற்படையை யுடைய - அச்சுவக்கிரீவன், திறைகொளல் ஒழிந்து
செல்லும் - கப்பங் கொள்வதை விட்டிருக்கிறான், ஆங்கு அவன் திறங்கள் எல்லாம்
அறிதியால் - ஆங்குள்ள அவன் செய்திகளை யெல்லாம் நன்கு உணர்ந்து கொள் வாயாக,
தீங்கு யான் உணர்த்திற்று உண்டோ - யான் கூறியவைகளில் பொய் ஏதேனும்
தெரியப்படுத்தியதுண்டோ, திருவடி தெளிக என்றான் - திருவடி களையுடைய பெரியீர்!
உணர்ந்தருள்க என்று கூறினான், (எ - று.)


(பாடம்.) 1. ஈங்குலக்கொம்பொ டொப்பாள். 2. ஆனை வேலோய்.