பக்கம் : 235
 

அச்சுவக்கிரீவனை மறுக்கத் தொடங்குவோன் சுச்சுதன், தன் மாட்டு வெறுப்புக்
கொள்ளாவாறு இவ்வாறு தொடங்குகிறான். நொடி வல்லான், தோலாநாவிற் சுச்சுதன்
என்பன, அவன் கூறியன அவன் சொல்வன்மையால் மெய்ம்மைய போன்றிருக்கின்றன;
உண்மையில் அவை அத்துணை வாய்மையல்ல என்பது குறிப்பு.

( 70 )

அச்சுவக்கிரீவனுக்கு ஒரு குறை கூறுதல்

309. தேனும் வண்டுந் தீதில பாடுஞ் செறிதாரோய்!
யானும் கண்டே னச்சுவ கண்டன் றிறமஃதே
மானங் கொண்ட மாரதர் போரே றனையாயோ
ரூனங் கண்டே னெட்டினு மொட்டே 1னுரைசெய்கேன்.
 

     (இ - ள்.) தேனும் வண்டும் - பொன் வண்டுகளும் ஆண் வண்டுகளும், தீதில
பாடும் - குற்றமில்லாத பண்களைப் பாடுதல் செய்யும்; செறிதாரோய் - பூக்கள் நெருங்கிய
மாலையை அணிந்தவனே!, அச்சுவகண்டன் திறம் அஃதே - அச்சுவக்கிரீவனுடைய செய்தி
அவ்வாறானதுதான், யானுங் கண்டேன் - அதனை நானும் நன்றாக வுணர்ந்திருக்கிறேன்,
மானங்கொண்ட - பெருமையமைந்த, மாரதர் போர் ஏறு அனையாய் - பதினாயிரம் போர்
மறவர்களுடன் தனித்து நின்று போர் செய்யும் பெருந்தேர் வீரர்களாகிய யானைக்
கூட்டத்திற்கு ஆண் சிங்கத்தைப்போன்றவனே!, ஓர் ஊனங்கண்டேன் -
அச்சுவக்கிரீவனுக்கு ஒரு குற்றம் இருப்பதை நானறிந்திருக்கிறேன், ஆதலால்; ஒட்டினும்
ஒட்டேன் - இவ்வையோரெல்லாம் உடன்படினும் நான் உடன்படேன், உரைசெய்கேன் -
அக்குற்றம் இன்னதென்று கூறுகிறேன், (எ - று.)

அச்சுவக்கீரிவனுக்கும் ஒரு குற்றம் இருக்கிறது, அதனைக் கூறுகிறேன் என்கிறான்.

( 71 )

பிறந்த நாட் குறிப்புக் கூறல்

310. மானக் கோதை மாசறு வேலோய் வரவெண்ணி
நானக் கோதை நங்கை பிறந்த நாளானே
வானக் கோளின் மாண்புணர் வார்கண் மறுவில்லாத்
தானக் கோளிற் சாதக வோலை தலைவைத்தார்.
 

(பாடம்) 1. உரைக்குற்றேன்.