(இ - ள்.) மானக்கோதை - பெருமை பொருந்திய மாலையிணை யணிந்த, மாசறுவேலோர் - குற்றமற்ற வேற்படையையுடையவனே! நானக் கோதை நங்கை பிறந்த நாளால் - கத்தூரி மணங்கமழும் மாலையை யணிந்த சுயம்பிரபை தோன்றிய நாளில், வரவு எண்ணி - மேல் நிகழப் போகின்றவைகளை நினைத்து, வானக்கோளின் மாண்புணர்வார்கள் - விண்ணிற் செல்லும் கோள்களின் (கிரகங்களின்) பெருமையை யறிந்தவர்கள், மறு இல்லாத் தானக்கோளில் - குற்றமில்லாத இருப்பிடங்களில் கோள்கள் அமைந்துள்ளமையால், சாதகவோலை - பிறந்தநாட் குறிப்புச் சுவடியை, தலைவைத்தார் - சிறந்ததாகக் குறித்து வைத்துள்ளார்கள். (எ - று.) பிறந்தநாட் குறிப்புச் சிறந்ததாக விளங்குகின்றது என்றல். தலை வைத்தல், மற்றவைகள் யாவற்றிற்கும் முதன்மையாய் இருக்கச் செய்தல் |
(இ - ள்.) காவிப்பட்டம் - செங்கழுநீர் மலர்கள் நிறைந்த நீர் நிலைகள், கள் விரி - தேனை மிகப் பெருக்குகின்ற, கானல் - நெய்தல் நிலத்தையுடைய, கடல் நாடன் - கடலாற் சூழப்பட்ட நாட்டிற்கு அரசன் ஆகியவனும், மேவிப்பட்டம் பெற்றவன் - தன் தந்தையால் விருப்பப்பட்டு முடி சூட்டப்பெற்றவனும் ஆகிய, காதல் மேயானால் - தன்பாற் காதற் கிழமை பூண்டுள்ள தன் கணவனாலே, ஏவி - ஒவ்வொரு வினையின்கண் செலுத்தப்பட்டு, பட்டம் ஈந்தவர் எல்லாம் - அதன்கட் சிறப்புடைமை கண்டு பட்டம் வழங்கப்பட்ட பிறரெல்லாம், இனிது ஏத்தும் - இனிதாக வணங்கற் சிறப்புடைய, தேவிப்பட்டம் - கோப்பெருந்தேவி என்னும் சிறப்புப் பட்டத்தை - திருவன்னாள் - திருமகளை ஒத்த நஞ்சுயம்பிரபை, சேர்பவள் - எய்துதற்கரியள் ஆவள், (எ - று.) அன்றும் ஏயும் அசைகள். |