அரசன் சிறப்புக் கருதி காவிதி, ஏனாதி முதலிய பட்டங்களைத் தன் பெருங்குடி மக்கட்கு வழங்குதல் மரபு. அங்ஙனம் சிறப்புப் பெற்றாரும், அரசனை வணங்குங்கால் கோப்பெருந் தேவியையும் வணங்குதலுண் மையின் “ஏவிப்பட்டம் ஈந்தவர் எல்லாம் இனி தேத்தும் தேவிப்பட்டம்“ என்றார். ஈந்தவர் - ஈயப்பட்டவர். சுயம்பிரபைக்குச் சாதக வோலை வரைந்தவர், அவள் தன் கணவனால் அளிக்கப்படும் தேவிப்பட்டம் பெறுவாள் என்று வரைந்துள்ளனர், என்பதாம். எனவே, அச்சுவக்கிரீவன் முன்னரே தன் மனைவிக்குத் தேவிப்பட்டம் அளித்து விட்டான் ஆதலால் அவன் சுயம்பிரபைக்குக் கணவனாகான் என்பது சாதக வோலையா லறிகின்றேன் என்பது குறிப்பாயிற்று. |
(இ - ள்.) நம் கோன் - நம்முடைய வேந்தனாகிய சடியரசனுடைய, நங்கை - மகளாகிய சுயம்பிரபைக்கு, நன்மகன் ஆகி நனி வந்தான் - நல்ல மணமகனாகத் தவமிகுதியால் தோன்றியவன், தங்கோன் ஏவ - தன் தந்தையாகிய அரசன் ஏவுதலானே இளவேந்தாய்த் தலை நின்றான் - இளவரசுப் பட்டம் பெற்றவனாய் அவன் ஏவலிற் றலைசிறந்து நின்றவன், இவ்வுலகம் - இப்பேருலகமெல்லாம், எங்கோன் என்று ஏத்தும் இயல் தன்னால் - இவன் எம் மன்னன் என்று பாராட்டுதற்குரிய அரசிலக்கண முடைமையால், செங்கோல் இன்பம் சேர்பவன் - புதிதாக இவனை மணந்த பின் செங்கோல் ஏந்தும் சிறப்பினைப் பெறுபவன், செருவேலான் - போரின்கண் மிக்கு விளங்கும் வேற்படையை உடையவன், (எ - று.) பவச்சுதன் அவையோரை நோக்கிக் கூறுகின்றான் ஆதலால் நங்கோன் என்றான். இச்சாதகக் குறிப்பெல்லாம் அச்சுவக்கிரீவன்பால் இல்லை என்பது குறிப்பு. எனவே அவன் இவள் கணவன் ஆகான் என்பது கருத்து. |