(இ - ள்.) கண்ணார் கோதை - காட்சிக்கு இனிமை பொருந்திய மாலையினையும், காமரு வேய்த்தோள் - அழகிய மூங்கில்போன்ற தோள்களையும் உடைய, கனகப்பேர் மண்ணார் சீர்த்திச் சித்திரை என்னும் மடமாது - மண்ணுலகத்தவர்களாற் கூறப்படுகிற மிகுந்த புகழையுடைய கனகசித்திரை என்னும் மடப்பமும் அழகுமுடையாள், இன்று - இந்நாளில், எண்ணார் இன்பக்காதலியாகி இயல்கின்றாள் - அச்சுவக்கிரீவனுக்கு மனம் பொருந்திய இன்பக் காதலியாகவும் அமைந்து விளங்குகின்றாள், தேவிப் பெறுபட்டம் - இராசமாதேவி என்று பெறப்படுகிற சிறப்பினையும், பெண்ணார் சாயல் பெற்றனள் - பெண்களுக்கமையவேண்டிய அழகமைந்த அவளே அடைந்தனள், (எ - று.) இதனால் சாதகவோலையில் சுயம்பிரபை தேவிப்பட்டம் பெறுபவள் என்ற குறிப்பால் அவள் அச்சுவக்கிரீவனுக்கு மனைவி ஆக வியலாமை காட்டப்பட்டது. |