(இ - ள்.) செந்து எரி செம்பொன் வீதி - சிவந்து விளங்குகின்ற செம்பொன்னாலாகிய தெருக்களையுடைய, திரிபுரம் அதனை ஆளும் - திரிபுரம் என்னும் நகரத்தை அரசாட்சி செய்யும், வாய்ந்து எரி வயிரப் பைம்பூண் மன்னவன் புதல்வன் - பொருந்தி விளங்குகின்ற வைரத்தி னாலாகிய பசிய அணிகலன்களையணிந்த அரசனுடைய மகன், நளிதாங்கன் என்பான் - நளிதாங்கன் என்னும் பெயரையுடையவன், கல்வியாற் கடலோடு ஒப்பான் - கல்வியிற் கடல் போன்று மிக்கவன், இவன் மல்லாடு ஏந்து தோள் அரசர் போர் ஏறு - இவன் மற்போர் புரிவதிலே புகழ்படைத்த தோள்களையுடைய அரசர்களுக்குச் சிங்க ஏற்றினைப்போன்றவன், காய்ந்து எரிகனலின் வெய்யோன் - சினந்து எரிகின்ற தீயினுங் கொடியவன், (எ- று.) நளிதாங்கன் கல்வியாற் பெரியவன் மற்போர்புரிவதில் வல்லவன் மிகுந்த சீற்றமுடையவன் என்க. அளிதாங்கன் எனப் பிரித்தலுமாம். |