பக்கம் : 253
 

     (இ - ள்.) விண்டு வாழுநர் மேல் - பகைமையினால் வேறுபட்டு வாழ்பவர்கள்மேல்,
நகும் வேலினாய் - இகழ்ந்துநகையாடல் புரியும் வேற்படையை யுடையவனே!, வண்டு
அவாம்முடி மன்னருள் - வண்டுகள் விரும்புகின்ற மாலையையணிந்த முடியரசர்களுள்ளே,
அவன் தண்டம் ஆற்றுநர்தாம் இலை - அவ்வச் சுவக்கிரீவனுடைய தண்டனையைத்
தாங்கக் கூடிய அரசர்கள் இல்லை, யான் உரைப்பான் உறுகின்றது - யான்
சொல்லும்படியாகவுள்ளது, சிறிது உண்டு - சிறிது இருக்கின்றது, (எ - று.) ஆல் : அசைநிலை.

அச்சுவகண்டனுடைய பகையைத் தேடிக்கொள்ளக்கூடாது என்னும் குறிப்புடன் கூறுகிறான்.

( 97 )

சுரேந்திரகாந்தத்து மேகவாகனன்

336. போக மாண்டவிச் சேடியோர் பொன்னகர்க்
1கேக நாயக னாயினி தாள்பவன்
மேக வாகன னென்றுளன் வீழ்மத
வேக மால்களி றும்மிரு 2வேலினான்.
 

      (இ - ள்.) போகம் மாண்ட - பலவகைப் போகங்களினாலும் சிறப்புப் பொருந்திய,
இச் சேடியோர் பொன்னகர்க்கு - இந்த வித்தியாதரர்களுடைய நகரங்களுள் ஒன்றாகிய
சுரேந்திரகாந்தம் என்னும் நகர்க்கு, ஏக நாயகனாய் - தான் ஒருவனே தலைவனாக, இனிது
ஆள்பவன் - இனிமையாக அரசாட்சி செய்பவன், வீழ்மத வேக மால் களிறுமிகு - சொரியா
நின்ற மதத்தையும் சினத்தையுமுடைய பெரிய களிற்று யானைகளை மிகுதியாக
உடையவனும், வேலினான் - வேற்படையையுடையவனும், மேகவாகனன் என்றுஉளன் -
மேகவாகனன் என்னும் பெயரையுடையவனுமாகிய ஒருவன் இருக்கிறான்,
(எ - று.)

பொன்னகர் - ஈண்டுச் சுரேந்திரகாந்தம் என்க. களிறும் என்புழி உம்மை : இசைநிறை.

( 98 )


(பாடம்) 1. ஏகநாகனா. 2. வேலான்.