பக்கம் : 254
 

மேகவானகன் மனைவி மேகமாலினி

337.

நாக மாலைகண் மேனகு வண்டினம்
ஏக மாலைய 1வாயிசை கைவிடாத்
தோகை மாமயில் 2போற்சுரி கூந்தலாள்
மேக மாலினி 3யென்றுரை மிக்குளாள்.
 

      இதுவும் அடுத்த செய்யுளும் ஒருதொடர்

         (இ - ள்.) நாகமாலைகன் மேல்நகு வண்டினம் - சுரபுன்னை மலர்களால்
தொடுக்கப்பெற்ற மாலைகளின்மேல் விளங்குகிற வண்டுக் கூட்டங்கள், ஏக மாலையவாய் -
ஒரே மாலையாகப் பொருந்தி, இசை கைவிடா - இசைபாடுதலில் நின்றும் நீங்காமைக்குக்
காரணமானவளும், தோகைமா மயில்போல் - தோகையமைந்த அழகிய மயிலைப் போன்ற
வளும், சுரிகூந்தலாள் - சுருண்டு தொங்குங் கூந்தலையுடையவளும் ஆகிய, மேகமாலினி
என்று உரை மிக்குளாள் - மேகமாலினி என்று பெயர் கூறப் பெறுகிற புகழ்மிகுந்த நங்கை,
(எ - று.)

மகனின் சிறப்பு விளங்குதற்குத் தாய் தந்தையர்கள் முன்னர்க் கூறப்பட்டனர்.

( 99 )

அவர்களுடைய மகன் விச்சுவன்

338. தேவி மற்றவ டெய்வம் வழிபட
மேவி வந்தனன் விச்சுவ னென்பவன்
ஓவி றொல்புக ழானுளன் கூற்றமும்
ஏவி நின்றினி தாண்டிடு 4மீட்டினான்.
 

      (இ - ள்.) தேவி - மேகவாகனன் மனைவியாவாள்; அவள் தெய்வம் வழிபட -
அவள் தன்னுடைய வழிபடு தெய்வத்தைப் போற்றி வழிபாடு செய்ய, விச்சுவன் என்பவன்
மேவி வந்தனன் - விச்சுவன் என்னும் பெயரையுடையவன் விருப்பத்துடன் அவளுக்கு
மகனாகப் பிறந்தனன், ஓவில்தொல்புகழான் உளன் - அவன் நீங்காத
பழம்புகழையுடையவனாக இருக்கிறான், கூற்றமும் - காலனையும், ஏவிநின்று இனிது
ஆண்டிடும் ஈட்டினான்- பணிசெய்யுமாறு தொழிற்படுத்தி நின்று இனிமையாக
ஆட்கொள்ளத் தக்க வலிமையினை யுடையவன், (எ - று.)


(பாடம்) 1. வாயொலி. 2. பொற்சொரி. 3. என்றுள. 4. வீட்டினான், வீடினான்.