பக்கம் : 255
 

கூற்றத்தையும் தன்வழிப்படுத்தி ஆளத்தக்கவன் எனவே மற்றையோரைத் தன் வழிபடுத்தி
ஆளுதல் வல்லவன் என்பது தானே போதரும்.

( 100 )

விச்சுவன் பெருமை

339. மையில் வானுல காண்டுமண் ணோர்களுக்
குய்யும் வாயி லுணர்த்திய தோன்றிய
ஐய னாற்பிற வாரஞர் நீங்கியிவ்
வைய மாயதெல் லாம்வளர் கின்றதே.
 

     (இ - ள்.) மையில் வான்உலகு ஆண்டு - குற்றமில்லாத தேவருல கத்தை
அரசாட்சிசெய்து, மண்ணோர்களுக்கு உய்யும் வாயில் உணர்த்திய தோன்றிய ஐயனால் -
மண்ணுலகத்தவர்களுக்குப் பிழைக்கும் வழியை உணர்த்துமாறு தோன்றிய அந்த
விச்சுவனால், இவ்வையம் ஆயது எல்லாம் - இவ்வுலகமானது முற்றும், பிற ஆரஞர் நீங்கி
- மற்றைய நிறைந்த துன் பங்கள் ஒழிந்து, வளர்கின்றது - மேன்மேலுஞ்
சிறந்தோங்குகின்றது, (எ- று.)

அந்த விச்சுவனால் உலகத்தினர் துன்பம் நீங்கிச் சிறந்தோங்கு கின்றனர் என்க.

( 101 )

இவ்வுலகிற்கருள் செய்தபின் மீண்டும்
தேவருலகை யடைவன்

340. மங்குல் வானுல காண்டு வரத்தினால்
இங்கு வந்தன னீண்டளி யீந்தபின்
திங்கள் வாளொளி யிற்றிகழ் சோதியாய்த்
தங்கு வானுல கிற்றகை சான்றதே.
 

     (இ - ள்.)மங்குல் வான்உலகு ஆண்டு வரத்தினால் இங்கு வந்தனன் - முற்பிறப்பில்
அந்த விச்சுவன் தேவருலகையாண்டு கொண்டிருந்தவன் இவ்வுலகத்தார் செய்த தவத்தினால்
இங்கு தோன்றி யிருக்கிறான், ஈண்டு - இவ்வுலகத்தும்; அளிஈந்தபின் - அவன் தண்ணளி
செய்த பிறகு, திங்கள் வாள்ஒளியில் திகழ் சோதியாய் - திங்களிடத்துண்டாகும்
பேரொளியைப் போல விளங்குகின்ற இனிய ஒளியுடையதாய், தங்குவான் உலகில் தகை
சான்றது - அவன் முன்னிருந்த வானுலகிற் போல நலம் மிக்கப் பெருகா நின்றது.