(இ - ள்.) தன்னின் ஆய் - தன்னைத்தானே ஆக்கி, விளைவித்து - தன்கண் மேன்மையைத் தானே விளைவித்து, இருளைத் தவிர்த்து - தன்கண் அறியாமையை அகற்றி, இன்னன் ஆக என்று - யான் இத்தகையன் ஆகுவல் என்று, எண்ணிய - நினைத்த, எண்ணமோடு - குறிக்கோளோடே, அன்னன் ஆதலின் - அத்தகையனாக இருத்தலாலே, அவன் மேற் பிறர் - அவ்விச்சுவன்மேல் அயலார், என்னரேனும் - எத்தகையராயினும், இன்னாதன - தீமைகள், எண்ணிலார் - நினையமாட்டார். அல்லல் அருளள்வார்க் கில்லை என்பவாகலின், அவன் தன்னைத் தானே வென்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அருளாளன் ஆதலின் அவன்பால் யாரும் தீமை எண்ணார் என்க. இச்செய்யுளுடன் வரும் செய்யுளை ஒப்புநோக்குக “நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானுந் தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினு மேல்மேன் உயர்த்து நிறுப்பானுந் தன்னைத் தலையாகச் செய்வானுந் தான்“ (நாலடி - 248) |