நால்வருள் - சுயம்பிரபையினுடைய தந்தையின் அமைச்சர்கள் நால்வருக் குள்ளே, நால்வனாவான் - நான்காமவனாகிய, அம்துணர் கொள் தொங்கல் மார்பிற் சுமந்திரி - அழகிய பூங்கொத்துக்கள் இடையிடையே விரவித் தொடுக்கப்பெற்ற மாலையையணிந்த மார்பையுடைய சுமந்திரி என்பவன், சொல்லலுற்றான் - மேற்கொண்டு தான் பேசலானான். (எ - று.) அமைச்சர்கள் அனைவருடைய உரைகளையும் கேட்டுக்கொண்டிருந்த நாலாமமைச்சன், தன்னுடைய எண்ணத்தை இப்பொழுது வெளியிடுகின்ற னன்; நால்வர் - சுச்சுதன், பவச்சுதன், சுகசாகரன், சுமந்திரி என்னும் நால்வர். நால்வன் என்றது நான்காமவன் என்றவாறு. |
(இ - ள்.) அண்ணல் அம் களிகொள்யானை - பெருமையையும் மிகுந்த களிப்பையுங்கொண்ட யானையையுடைய, அச்சுவகண்டன் மூத்தாற்கு எண்ணலுந் தகுவ தன்று - அச்சுவகண்டனாகிய முதியவனுக்குக் கொடுத்தலை உள்ளத்தில் நினைத்தல்கூடத் தக்கதன்று, இவன்பணி அகற்றல் ஆற்றா - அச்சுவகண்டனுடைய ஏவலை நீக்கமாட்டாத, கண்நலம் கவரும் வேலோர்க்கு ஈயினும் - கண்பார்வையைத் தம்மிடத்தே கவரும் அழகிய வேற்படையை யுடையவர்கட்குக் கொடுப்பினும், கருமம் அன்று - அது செய்தற்குரிய செயலாகமாட்டாது, பெண்நலம் கனிந்தபேதை - பெண்மை நலங்களெல்லாம் இனிதமைந்து நிரம்பப்பெற்ற சுயம்பிரபை, இருப்பதும் பெருமை அன்று - மணமாகாமலிருத்தலும் சிறப்புடையதன்று, ஆல்கள் இரண்டும் அசைநிலைகள் (எ - று.) அச்சுவகண்டன் அகவையில் மூத்தவன்; அவன் கீழ்ப்பட்ட அரசர்களுக்குக் கொடுப்பதும் முறைமையன்று. சுயம்பிரயை மேலும் மணமாகாதிருத்தலும் தக்கதன்று என்க. |