பக்கம் : 262
 

பிறழ்வ போலும் - அழகிய கயல்மீன்களின் பிறழ்ச்சியைப்போல் பிறழ்ச்சியினை யுடைய
வாய், ஐஅரி அடர்த்த வாள்கண் - அழகிய செவ்வரிகளை மிகுதியாகக் கொண்டுள்ள
வாளைப் போன்ற கண்கள், தவத்தின்மிக்கான் - தவத்திற் சிறந்தவனும், பங்கயச்
செங்கணான்மேல் - தாமரை மலர்போன்ற சிவந்த கண்களையுடையவனு மாகிய விச்சுவன்
மீது, படைத்தொழில் பயின்ற போழ்தும் - படைக்கலங்களின் கொலைத்தொழிலைத் தாம்
மேற்கொண்ட விடத்தும், தங்கிய மனத்தன்ஆகி - தவத்திலே தங்கிய உள்ளத்தை
யுடையவனாகி, தளர்விலன் - சிறிதும் வருந்துதலை யடையான் (எ - று.)
மங்கையர் கண்கள் விச்சுவனை வருத்தமாட்டா என்க.

( 112 )

விச்சுவன் இயல்பு

351. 1மண்கனி முழவச் சீரு மடந்தையர் தூக்கு மற்றும்
2பண்கனி பாட லாடற் பாணியும் பயின்று மேவான்
விண்கனித் தனைய வின்ப வெள்ளமும் வெறுத்து நின்றான்
3கண்கனி யுருவக் காளை கடவுளர் தகையன் கண்டாய்.
 

     (இ - ள்.) மண்கனி முழவச் சீரும் - மார்ச்சனை பொருந்திய முழவு முதலிய
ஒலிக்கருவிகளின் சிறப்பையும், மடந்தையர் - மங்கையர்களின், தூக்கும் பண்கனி
ஆடல்பாடல் பாணியும் - தாளத்தின் அமைதி பொருந்திய இசையொடுகூடிய ஆடல்பாடல்
வகையையும், பயின்று மேவான் - விரும்பி மனஞ் செலுத்தமாட்டான், விண்கனிந்த
அனைய இன்பவெள்ளமும் வெறுத்து நின்றான் - விண்ணுலக இன்பமே மிகுந்து சிறந்தாற்
போன்ற இன்பப்பெருக்கையும் ஒதுக்கியிருக்கின்றான், கண்கனி உருவக்காளை - கண்ணிற்கு
இன்பந்தரும் பேரழகு படைத்த உருவத்தையுடைய இளையோன், கடவுளர் தகையன்
கண்டாய் - கடவுளர்களைப் போன்ற தன்மையை உடையவன் அறிந்து கொளிவாயாக
(எ - று.)

விச்சுவன் பெண்களின் ஆடல்பாடல்களிலும் இன்பத்திலும் உள்ளஞ் செலுத்த மாட்டான்.
கடவுளர் தன்மையை உடையவன் என்றபடி.

( 113 )


   (பாடம்) 1. மண்கணை முழவ மேங்க மடந்தையர் நுடங்கு மாறும். 2. பண்கனிந் தினிய பாடற் பாணியும். 3. கண்கனி யுருவக்காளை.