(இ - ள்.) செறிகழல் அவற்குத் தாதை - பொருந்திய வீரக்கழலை யணிந்த அந்த விச்சுவனுடைய தந்தையாகிய, உலங்கொள் தோளான் - திரண்ட கல்லைப்போன்ற தோள்களையுடைய மேகவாகனன், சித்திரகூடம் என்னும் அறிவரன் கோயில் எய்தி - சித்திரகூடம் என்று கூறப்படுகின்ற அருகக் கடவுள் கோயிலையடைந்து, அணிவிழா அயர்ந்தகாலை - அழகிய திருவிழாச் செய்தபொழுது, இறுதியில் - முடிவில், அவதி ஞானத்தையுடைய யசோதரன் என்னும் பெயரையுடைய முனிவனைப்போற்றி, மகன்திறம கேட்டான் - மகனுடைய வரலாற்றைக் கேட்டான் (எ - று.) மேகவாகனன் யசோதரன் என்னும் முனிவனைப் போற்றி மகனுடைய தன்மையைப்பற்றி உசாவினான் என்க. அவதிஞானி - முக்கால நிகழ்ச்சி களையும் உணரும் அறிவுடையோன். |
(இ - ள்.) பங்கயப் பழன வேலிப் பவகிரி அரசன் - தாமரை மலர்ந்த வயல்களை வேலியாகவுடைய பவகிரி என்னும் நாட்டின் அரசன், பைந்தார் தங்கிய தடங்கொள் மார்பன் சயசேனன் - பசியமாலை தங்கிய அகன்ற மார்பையுடைய சயசேனன் என்பவன், அவற்குத் தேவி - அவனுடைய மனைவி, செங்கயல் நெடுங்கன் செவ்வாய்ப் பிரீதிமதி - செவ்விய கயல |