(இ - ள்.) கார்விரி தடக்கை வேந்தே - இரவலர்க்குக் கொடை யளிப்பதிலே கார்காலத்து முகிலினது தன்மையானது அமையப்பெற்ற பெரிய கையையுடைய அரசனே!, வார் அணி முரசம் ஆர்ப்ப - வாரால் வரிந்து கட்டப்பெற்ற அழகிய முரசம் ஒலிக்கவும், வயிரொடு வளைகள் ஏங்க - ஊதுகொம்புகளோடு சங்குகள் இசைக்கவும், தாரவர் குழாங்கள் ஈண்ட - மாலையை அணிந்த அரசர் கூட்டங்கள் நெருங்கவும், சயமரம் அறைது மேனும் - தானே மணாளனைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதாகிய சுயம்வரத்திற்கு ஆவனசெய்து அறிவிப்போமானாலும், ஆர் அவிர் ஆழியானை - நிறைந்த ஒளிவீசும் உருளைப் படையையுடையவனாகிய அச்சுவகண்டனை, அஞ்சுதும் - அஞ்சிக்கொண்டிருத்தல் வேண்டும். கழலவர் கருமம் - வீரக்கழலையணிந்த மற்றைய அரசர்களுடைய செயலை, அறியலாகா என்றான் - நாம் உணர்ந்து கொள்ளுதல் இயலாது என்று கூறினான் (எ - று.) சுயம்பிரபை தானே மணாளனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுயம்வரச் செய்தியை அறிவிப்போமாயினும் அதனாலும் தீமை நேரிடும்; அச்சுவகண்டனும் பகையாக முடிவன். மற்றைய அரசர்களும் தீமை புரியத் தொடங்குவர் என்கிறான் அமைச்சன், |
(இ - ள்.) ஒன்றுநாங் கருதிச் சூழின் - ஒரு செய்கையை நாம் நன்றாக எண்ணித் தொடங்குவோமானாலும், ஊழது விளைவு - அச் செய்கையின் முறைமையமைந்த நிகழ்ச்சியானது, தானே கன்றி - தானாகவே தோன்றி முதிர்ந்து, நாங்கருதிற்று இன்றி - நாம் நினைத்தபடி நடவாமல், |