பக்கம் : 268
 

என்றான் - ஊழானே இனி நிகழவிருக்குஞ் செய்தியை உணர்ந்து கொள்ளுவோம் என்று
கூறினான் (எ - று.)

“நங்குலத்தினர்க்கு நிகழ்வதுரைப்பவன் சதவிந்து, அவனிடம் செய்தியைத் தெரிவித்து
அவன் கூறுகிறபடி செய்வோம்“ என்று கூறி முடிக்கிறான்.

( 121 )

சுமந்திரி உரையை மற்றையோர் உடன்பட்டுக் கூறல்

360. என்றவன் மொழிந்த போழ்தி னேனையா ரினிதி னோக்கி
மின்றவழ் விளங்கு வேலோய் மெய்யினு மேவல் வேண்டும்
சென்றவன் மனையு ணீயே வினவெனச் சேனை வேந்தன்
1நன்றவர் மொழிந்த வெல்லா நல்லவா நயந்து கேட்டான்.
 

     (இ - ள்.) என்று அவன் மொழிந்த போழ்தில் - மேற்கூறியவாறு சுமந்திரியானவன்
சொல்லியபொழுது, ஏனையார் இனிதின் நோக்கி - மற்றைய அமைச்சர்கள் அரசனை
இனிமையுடன் பார்த்து மின்தவழ் விளங்கு வேலோய் - ஒளியமைந்து விளங்குகின்ற
வேற்படையை யுடையவனே !, மெய் இனும் மேவல் வேண்டும் - உண்மையை இன்னும்
நன்கு ஆராய்ந் துணர்தல்வேண்டும், அவன்மனையுள் நீயே சென்று வினவு என -
சதவிந்து நிமித்திகனுடைய இல்லத்திற்கு நீயே சென்று கேட்பாயாக என்றுகூற,
சேனைவேந்தன் - படையையுடைய சுவலனசடியரசன், நன்றவர் மொழிந்த எல்லாம் -
நன்மையை யுடையவர்களாகிய அமைச்சர்கள் கூறியவைகளையெல்லாம், நல்லவா - நல்ல
மொழிகளாக, நயந்து கேட்டான் - விரும்பிக் கேட்டுக்கொண்டான் (எ - று.)

ஏனையார் - ஏனை அமைச்சர். அவன் - அச்சதவிந்து. சேனை வேந்தன் என்றது
சடியரசனை. நல்லவாறு - ஈறுதொக்கது.

( 122 )

அமைச்சர்கள் அரசனை அவையைக்
கலைக்குமாறு கூறுதல்

361. இந்திர னனைய நீரோ யினிப்பிறி தெண்ணல் வேண்டா
மந்திர நீளு மாயின் வருவன வறிய லாகா
சந்திரன் றவழ நீண்ட தமனியச் சூல நெற்றி
அந்தரந் திவளு ஞாயிற் கோயில்புக் கருளு கென்றார்.
 

  (பாடம்) 1. மெய்யிது.