(இ - ள்.) குண்டு நீர் - ஆழமான நீரினையும், குழு குவளை மலர்ப் பட்டமும் - கூட்டமான குவளைமலரையும் உடைய குளங்களினும், நீர் மண்டு மரகதமணிக்கல் வாவியும் - நீர்புகா நின்ற மரகத மணிகள் பதிக்கப்பட்ட படித்துறைகளையுடைய நீர்நிலைகளினும் புகுந்து, இளையவர் நீர்கொண்டு குடைய - இளமையுடைய மகளிரும் மைந்தரும் நீரைக் கையான் வாரிக் கொண்டு ஆடுதலானே, வண்டுகொங்கொடு நீர்த்திவலையின் மயங்கி - அலமந்த வண்டுகள் தேன் துளிகட்கும் நீர்த்துளிகட்கும் வேற்றுமை யுணராது மயங்கித் தடுமாறி, வீழ்ந்த - வீழலாயின (எ - று.) மரகத மணிக்கல் போன்ற நிறமுடைய வாவியுமாம். கொங்கு - தேன், திவலை - துளி. |
(இ - ள்.) பங்கயத் துகள் படு பழன நீர்த்திரை - தாமரைப் பூந்தாது படிந்த மருதநிலத்துள்ள நீர்நிலைகளின் அலைகள், மங்கையர் முலையொடு பொருத - அவற்றில் ஆடா நின்ற மகளிர்களின் முலைகளோடு மோதாநின்றன, வாவிகள் - அவ்வலைகளையுடைய அக்குளங்களோ, அங்கு அவர் அழித்த அரிசனச் சேற்றினும் - அவ்விடத்தே அம்மகளிர் அழித்த மஞ்சட் குழம்பானும், குங்குமக் குழம்பினும் - குங்குமக் குழம்பானும், குழம்பு கொண்ட - தம்மகங் குழம்புவனவாயின (எ - று.) பழனம் - ஈண்டு மருதத்தின் மேனின்றது. அலைகள் முலையொடு பொருத; அவற்றையுடைய வாவிகள் அகங்குழம்பின என்ற நயம் உணர்க. அரிசனம் - மஞ்சள். அஞ்சனமென்றும் பாடம். |