(இ - ள்.) கொங்கைவாய்க் குழலவர் - கொங்கைகளின் மேற்படிந்த கூந்தலையுடைய மகளிர், குளிப்ப - தாம் நீராடுதற் பொருட்டு, கயம் வளர் - அக்குளத்திலே வளராநின்ற, தூம்பு உடை அம்கள் வாய் ஆம்பல் பொங்குகாடு - தண்டினையுடைய அழகிய தேன் பொருந்திய வாயையுடைய ஆம்பலாகிய மிக்க காட்டின்கண், ஏர்பட ஞெறித்து - அழகுண்டாக நெரித்து, பூவொடு விட்டன - இயற்கையாகவே மலர்ந்த பூக்களோடு விடப்பட்ட நாளரும்புகள், திங்கள் வாள் முகவொளி திளைப்ப - அம்மகளிரின் திங்கள்போன்ற ஒளியையுடைய முகத்தின் ஒளி படுதலானே, விண்ட -மலர்ந்தன (எ - று.) மகளிர் நெரித்துவிட்டனவாகிய அரும்புகள் அவர் முகவொளி திளைத்தலாலே மலர்ந்தன என்க. விட்டன - பெயர். ஞெறித்து - நெரித்து. நெரித்து விட்டன - என்றதனால் அரும்புகள் என்பது பெற்றாம். திங்கள் ஒளியினால் ஆம்பல் மலர்தலுண்மையின் இங்ஙனம் கூறினார். நீருண்முழுகி எழுதலாற் குழல் கொங்கைமேற் படிந்தன என்க. |
(இ - ள்.) மா இரும் பனி தடம் - பெரிய கரிய குளிர்ந்த குளத்திலே, படிந்து - நீராடி, மை அழி - மை அழியப்பெற்ற, சே அரி நெடுமலர் கண்கள் - சிவந்த வரிகள் படர்ந்த நெடிய மலர்போன்ற தம்முடைய கண்கள், சேந்தென - சிவந்து விட்டனவாக அதனை, தாயரை மறைக்கிய - தம் தாயர் அறியாதவாறு மறைக்கும் பொருட்டு. குவளை - தாம் சூடிய செங்கழுநீர் மலர், தாது தேன் பாய - பூந்தாதோடு தேன் துளிக்கும்படி, பாவைமார்கள் - அம் மகளிர்கள், மோந்து - அவற்றை மோப்பார் போன்று காட்டி, இறைஞ்சினார் - தலை வணங்கிநின்றனர் (எ - று.) மகளிர்கள் தம் கண் சேந்தமை மறைக்கும் பொருட்டுக்குவளை மலரை மோப்பார் போன்று தலையைக் குனிந்து நின்றனர் என்க. |