(இ - ள்.) சந்தனம் துளி - சந்தனக்குழம்பின் துளிகள், தலை ததும்ப - இடந்தோறும் ததும்பும்படி பெய்து, சாந்தளைந்து - குங்குமச் சாந்தையும் பூசி, அந்தரத்து - வானிடத்தே, அசைப்பன - அசைத்தற்குரிய, ஆலவட்டமும் - விசிறிகளையும், எந்திரத் திவலையும் - நீர்வீசும் இயந்திரத் துருத்திகளையும், இயற்றி - அமைத்து, ஈர்மணல் - ஈரமுள்ள மணல்பரப்பிய, பந்தருள் - பந்தலினுள்ளே, குவலைப்பாலிகை - குவளைத்தாழிகளையும், பாய்த்தினார் - பரப்பி வைத்தனர் (எ - று.) சந்தனத் துளிகளைச் சிதறிக்; குங்குமச் சாந்தைப் பூசி. நீர் தெளித்து; மணல் பரப்பப்பட்ட பந்தருக்குள் குவளைப்பாலிகையும் பரப்பினார் என்க. பாலிகைக் குவளை - குவளைக்கொடி நட்டு வளர்க்கப்படும் ஒரு பாண்டம். இவற்றைக் குளிர்ச்சியின் பொருட்டு மாடங்களிற் பரப்புதல் வழக்கம், இதனைப் “பாலிகைத் தாழியொடு பல்குடம் இரீஇ முந்நீர்ப்பந்தர்முன் கடைநாட்டி“ எனவரும் பெருங்கதையினும் (1 - 40 : 125 - 6) காண்க. |