பக்கம் : 277
 

அரசன் நடந்து செல்லுதல்

365. பொன்னவிர் மணிக்கழல் புலம்பத் தேனினம்
1துன்னலர் தொடையலிற் சுரும்பொ டார்த்தெழ
மன்னவ னடத்தொறு மகர குண்டலம்
2மின்மலர்ந் திலங்குவில் விலங்க விட்டவே.
 

     (இ - ள்.) பொன் அவிர் மணிக்கழல் புலம்ப - பொன்னைப்போல் விளங்குகின்ற
அழகிய வீரக்கழல் ஒலிக்கவும், தேன் இனம் - பெண்வண்டுக் கூட்டங்கள், துன்அலர்
தொடையலில் - நெருங்கிய மலர்கள் பொருந்திய மாலையில், சுரும்பொடு ஆர்த்துஎழ -
ஆண்வண்டுகளுடனே ஆரவாரித்து எழவும், மகரகுண்டலம் - மகரமீன் வடிவாகச்
செய்யப்பட்ட காதணிகள், மன்னவன் நடத்தொறும் - அரசன் நடக்கும்பொழுதெல்லாம்,
மின் மலர்ந்து இலங்குவில் - மின்னலைப்போல அமைந்து விளங்குகிற ஒளியை, இலங்க
விட்ட - நன்கு காணப்பெறுமாறு வெளிப்படுத்தின (எ - று.)
மன்னவன் நடந்து செல்லும்போது மகர குண்டலங்கள் ஒளிவிட்டன என்க.

( 137 )

மெய்க்காவலர் வேந்தனைச் சூழ்தல்

366. நெய்யிலங் கெஃகினர் நிறைந்த விஞ்சையர்
கையிலங் கீட்டியர் கழித்த வாளினர்
மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர்
வையகங் காவலன் மருங்கு சுற்றினார்.
 

     (இ - ள்.) வையகங் காவலன் மருங்கு - உலகத்தைப் பாதுகாப்பவனாகிய சுவலனசடி
அரசனின் பக்கத்திலே, நெய் இலங்கு எஃகினர் - நெய் தடவப்பெற்ற வேற்படையை
ஏந்தியவர்களும், நிறைந்த விஞ்சையர் - நிரம்பிய மந்திரங்களையுடையவர்களும்,
கைஇலங்கு ஈட்டியர் - கையிலே விளங்குகின்ற ஈட்டியை உடையவர்களும், கழித்த
வாளினர் - உறையினின்று நீக்கப்பெற்ற வாட்படையை ஏந்தியவர்களும், மெய் இலங்கு
உறையினர் - உடலிலே விளங்குகின்ற சட்டையை அணிந்தவர்களும், விசித்த கச்சையர் -
அரையிலே கட்டப்பெற்ற கச்சையை உடையவர்களுமாகிய மெய்காப்பாளர்கள், சுற்றினார் -
சூழ்ந்து சென்றார்கள் (எ - று.)


  (பாடம்) 1. துன்னலந் தொடையவிர். 2. வின்மலந்.