பக்கம் : 279
 

அருளோடு எழுந்தருளிவந்த, வெம்கொங்கு அலர் தெரியலாய் - விருப்பத்தை
யுண்டுபண்ணுகின்ற மணம்விளங்கும் மாலையைப் புனைந்த அரசனே!, கொற்றம் கொள்க
என - நீ வெற்றியை அடைவாயாக என்று, ஆசி கூறினான் - வாழ்த்துரை வழங்கினான்
(எ - று.)

நிமித்திகனை அரசன் தன்மனைக்கு வருமாறு அழைத்து உசாவ லாகாதோ? நடந்து
நிமித்திகன் மனைக்குச் செல்வானேன்? சதவிந்து நிமித்திகன் பேரறிவாளன்; முக்கால
உணர்ச்சியையும் பெற்றவன்; அவன் தகுதிவாய்ந்த மெய்யறிவாளனாக விளங்குதலின்,
அவனைத் தன் மனைக்கு அழைப்பதற்கு அரசன் துணியவில்லை. சடியரசன்
அறிவாளியாதலின் அறிஞரிடத்திலே நடந்துகொள்ள வேண்டிய முறைப்படி நடந்து
கொண்டான்.

( 140 )

அரசன் மண்டபத்தை அடைதல்

379. கொண்டமர்ந் தகிற்புகை கழுமிக் கோதைவாய்
விண்டமர்ந் தொழுகுவ மதுக்கள் வீழ்ந்துராய்
வண்டமர்ந் தொலிசெய மருங்குல் கொண்டதோர்
மண்டப மணித்தல மன்ன னெய்தினான்.
 

     (இ - ள்.) மன்னன் - அரசன், கொண்டு அமர்ந்து - நிமித்திகன் கூறிய
வாழ்த்துரையை மனமுவந்து கொண்டு விருப்பத்துடன், அகில்புகை கழுமி - அகில்புகை
நிரம்பி, கோதைவாய் விண்டு - மாலையின் மலர்கள் நன்குவிரிந்து, மதுக்கள் அமர்ந்து
ஒழுகுவ - தேன்துளிகள் நெருக்கமாகச் சிந்துவனவற்றின் மேல், வண்டு அமர்ந்து வீழ்ந்து
உராய் ஒலி செய - வண்டுக்கூட்டங்கள் விரும்பி உலாவி முரலாநிற்பக் காரணமான,
மருங்குல் கொண்டது ஓர் மண்டபமணித்தலம் எய்தினான் - பக்கங்களையுடையதாய்
அமைந்துள்ள மண்டபத்தின்கண் அழகிய ஓர் இடத்தை அரசன் சேர்ந்தான் (எ - று.)

( 141 )

அரசன் தான் வந்த காரியத்தை எண்ணுதல்

380. தழையவிழ் சந்தனப் பொதும்பு போன்மது
மழைதவழ் மண்டப மலிர வீற்றிருந்
துழையவர் குறிப்பறிந் தகல வொண்சுடர்க்
குழையவன் குமரிதன் கரும மெண்ணினான்.