பக்கம் : 28 | | இது நெய்தல் நிலத்தன்மை. ‘நெய்தற்கு மா சுறாவும் முதலையும்‘ என்றார் நக்கீரர். (இறையனார் களவியல் உரை) இதனை மறுத்து ‘மா உமண்பகடு போல்வன. முதலையும் சுறாவும் மீனாதலின், மாவென்றல் மரபன்று‘ என்றனர் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் நச்சினார்க்கினியர். தேவர், மனிதர், விலங்கு, புள், ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்னும் எழுவகைப் பிறப்பினுள், புள் முதலியவைகள்; தேவர், மக்கள், விலங்கு, நரகர் என்னும் நால்வகைக் கதிகளுள் விலங்கு அடங்குவதால் முதலையை மாஎன்றல் பொருந்தும் “சேர வொன்றை யொன்றுமுன் தொடர்ந்து சீறிடங்கர்மா“ என்றார் கம்பர். மாஎன்பதை வண்டல் வார்கரைக்கு அடையாக்கினும் அமையும். முண்டகம்-முள், தாமரை, நீர்முள்ளி,கள், நெற்றி, தாழை முதலிய பொருள் குறிக்கும் ஒரு பெயர்த்திரிசொல். | ( 22 ) | குறிஞ்சி | 29. | கண்ணி லாங்கழை யின்கதிர்க் கற்றையும் மண்ணி லாங்குரல் வார்தினை வாரியும் எண்ணி லாங்கவி ளைவன வீட்டமும் உண்ணி லாங்குல வாமை யுயர்ந்தவே. | (இ - ள்.) கண்நிலாம் கழையின் கதிர்க் கற்றையும்-கணுக்கள் விளங்குகின்ற மூங்கில்களிடத்தே விளைந்தநெல்லும்; மண்நிலாம் வார் குரல் தினைவாரியும்-மண்ணிடத்தே விளையும் நீண்ட கதிர்களையுடைய தினையாகிய வருவாயும்; எண் இல்-அளவில்லாதனவாய்; விளைவன ஈட்டமும்-விளைகின்றமற்றைப் பொருள்களின் தொகுதியும்; உண்ணில்-பிறர்க்குக் கொடுத்துத் தாம் உண்டபோதும்; ஆங்கு-அந்நாட்டிடத்தே; உலவாமை உயர்ந்த-குறைவுபடாது மிகுந்திருந்தன. (எ - று.) உண்ணிலும் எனல்வேண்டிய உம்மை செய்யுள் விகாரத்தாற்றொக்கது. ஆங்க-அசைநிலை. இஃது அந்நாட்டின் செல்வமிகுதியை உணர்த்துகின்றது. மூங்கில் நெல்லும் தினையும் சோளம் முதலிய மற்றைப் பொருள்களின் பெருக்கும் பிறர்க்கு ஈந்தும் தாம்உண்டும் என்றும் குறைவுபடாமல் சிறந்திருக்கும் எனவே அந்நாட்டின் செல்வச் சிறப்புமிகுந்தது என்பது பெறப்படுகிறது. | | |
|
|