பக்கம் : 280
 

     (இ - ள்.) தழைஅவிழ் சந்தனப் பொதும்புபோல் - தளிர்கள் நிறைந்து
விளங்குகின்ற சந்தன மரங்கள் செறிந்த பொழிலைப்போல, மதுமழை தவழ் மண்டபம் -
தொங்கவிடப் பெற்றுள்ள மலர் மாலைகளினின்றும் தேன் மழையானது சொரிகின்ற
மண்டபம், மலிர வீற்றிருந்து - விளக்கம் அடையுமாறு அமர்ந்திருந்து, உழையவர் -
அண்மையில் இருப்போர், குறிப்பறிந்து அகல - அரசன் நிமித்திகன் ஆகியவர்களின்
உள்ளக்குறிப்பை முகத்தினால் ஒருவாறுணர்ந்து அவ்விடத்தைவிட்டு நீங்க, ஒண்சுடர்க்
குழையவன் - பேரொளி தங்கிய காதணியை அணிந்த சுவலனசடி அரசன், தன்
குமரி கருமம் எண்ணினான் தன் மகளாகிய சுயம்பிரபையின் திருமணச் செயலைப்பற்றி
மனதினிடத்தே நினைத்தான் (எ - று.)

அரசன் குறிப்பையும் நிமித்திகன் குறிப்பையும் ஏவலாளர்கள் உணர்ந்து, இருவரையும்
தனியாக விட்டு விலகிச் சென்றனர். அரசன் தான்வந்த காரியத்தைப்பற்றி எண்ணமிட்டுக்
கொண்டிருந்தான் என்றபடி. நிமித்திகன் பிறர் நினைத்ததையுணர்ந்து கூறுபவன் ஆதலின்
மன்னன் கருத்தின் எண்ணினான் என்க.

( 142 )

நிமித்திகன் பேசத் தொடங்குதல்

381. கனைத்தெதிர் கதிர்மணிக் கடகஞ் சூடிய
பனைத்திர ளனையதோட் படலை மாலையான்
மனத்தினை மறுவினூல் வாயி னாற்சொல
நினைத்திவை விளம்பினா னிமித்த நீதியான்.
 

      (இ - ள்.) நிமித்த நீதியான் - நிமித்தநூற் புலமையை உடையவனாகிய சதவிந்து,
கனைத்து எதிர் கதிர் மணிக் கடகம் சூடிய - மிகுத்துத் தம்முள் எதிராநின்ற
ஒளிகளையுடைய மணிகள் பதித்துச் செய்யப்பட்ட தோள்வளையை அணிந்த, பனைத்திரள்
அனையதோள் - பனைமரத்தின் திரட்சியை ஒத்த தோளின்கண், படலை மாலையான்
மனத்தினை - தளிர்விரவிய மலர்மாலையை யணிந்த சுவலனசடியரசனது உள்ளத்தினை,
மறுவு இல் நூல் வாயினால் சொல - குற்றமற்ற நூன்முறைப்படியே சொல்லுதற்கு, நினைத்து
இவை விளம்பினான் - எண்ணி மேற்கூறப் போகிற மொழிகளைச் சொன்னான் (எ - று.)